குட்கா, பான் மசாலா மற்றும் பாக்கு விற்பனைத் தடை!
கர்நாடக மாநிலத்தில் போதைப் பொருட்கள் கலந்து விற்கப்படும் குட்கா மற்றும் பான் மசாலா போன்ற பொருட்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் டி.கே.சிவக்குமார் கடுமையான எச்சரிக்கை ஒன்ற விடுத்துள்ளார். பெங்களூருவில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற ஒரு முக்கிய விழாவில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இந்த விபரங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
குட்கா, பான் மசாலா மற்றும் பாக்கு போன்ற பொருட்களில் சில நச்சுத் தன்மையுள்ள போதைப் பொருட்கள் கலந்து விற்கப்படுவதாகத் தனது கவனத்திற்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், இந்தத் தவறான செயல்கள் உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் மாநிலத்தில் அனைத்து வகையான குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களின் விற்பனைக்கும் முழுமையாகத் தடை விதிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தை போதையற்ற ஒன்றாக மாற்றுவதே தங்களது முக்கிய நோக்கம் என்றும், இளைஞர்கள் இந்தத் தீய பழக்கங்களில் சிக்காமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். நச்சுப் பொருட்கள் சிறிதளவு கலந்திருப்பது கண்டறியப்பட்டாலும் அத்தகைய நிறுவனங்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாயும் என்றும் அவர் தனது உரையில் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.