இமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவு.. ராட்சத பாறைகள் உருண்டு விழுந்து போக்குவரத்து முடக்கம்!

 

இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சம்பா மாவட்டத்தில் உள்ள பழங்குடியினப் பகுதியான பாங்கி பள்ளத்தாக்கு மலைப்பாதையில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, அப்பகுதிக்கான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இமாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாகப் பெய்து வரும் கனமழை காரணமாக, பாங்கி பகுதிக்குச் செல்லும் முக்கிய மலைப்பாதையின் மேலிருந்து டன் கணக்கிலான மண்ணும், ராட்சதப் பாறைகளும் திடீரெனச் சரிந்து விழுந்தன.

இந்த நிலச்சரிவு காரணமாகச் சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றன. அத்தியாவசியப் பொருட்களான பால், காய்கறி மற்றும் மருத்துவத் தேவைகளுக்காகச் செல்வோர் மாற்று வழியின்றி நடுவழியிலேயே தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

நிலச்சரிவு குறித்துத் தகவல் அறிந்ததும் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சாலையில் விழுந்து போக்குவரத்தை முடக்கியுள்ள பிரம்மாண்ட பாறைகளை உடைத்து அகற்றுவதற்காகப் பல ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் கணரகக் கருவிகள் சம்பவ இடத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

மேலும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதா என்பதை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால், சாலையை மூடியுள்ள இடிபாடுகளைப் போர்க்கால அடிப்படையில் அகற்றி, போக்குவரத்தை விரைந்து சீரமைக்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மலைப்பாதைகளில் தொடர்ந்து நிலச்சரிவு அபாயம் நீடிப்பதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அத்தியாவசியத் தேவைகளின்றி இரவு நேரங்களில் மலைப் பிராந்தியங்களில் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என இமாச்சலப் பிரதேச மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.