நீலகிரி மலையில் 88 இடங்களில் மண் சரிவு.. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!
மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 88 இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டு, இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பர்லியார் பகுதியில் சென்ற அரசுப் பேருந்து மீது ராட்சத மரமும் சேறும் விழுந்ததில், பேருந்து ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். கடந்து 3 நாட்களில் மட்டும் 88 மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மேலிருந்து ராட்சத பாறைகள் உருண்டு விழுந்ததால் ஏராளமான வீடுகள், மின் கம்பங்கள், மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளன. பாதுகாப்பு கருதி மலை ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
நிலைமை தீவிரமடைந்துள்ளதால், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளுக்குச் சுற்றுலாப் பயணிகள் யாரும் வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
தொடர் மழை, மலைச்சரிவுகளை வெட்டிச் சாலைகள் அமைத்தல், அத்துமீறிய கட்டுமானங்கள், நிலப் பயன்பாட்டு மாற்றம், நீண்டகால வானிலை மாற்றத்தால் பாறைகள் பலவீனமடைந்தது மற்றும் முறையான வடிகால் வசதி இல்லாததே இந்த மண் சரிவுகளுக்கு முதன்மைக் காரணமாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன.
1824-ல் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவால் தான் 'அவலாஞ்சி' என்ற பெயரே உருவானது. 1978, 1993, 2009, 2019 ஆகிய ஆண்டுகளைத் தொடர்ந்து, 1973 முதல் தற்போது வரை நீலகிரி 500-க்கும் மேற்பட்ட நிலச்சரிவுகளைச் சந்தித்துள்ளது. புவியியல் ஆய்வு நிபுணர்கள் நிலச்சரிவைக் குறைப்பதற்கான வழிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
மலைச்சரிவுகளில் கட்டுமானப் பணிகளை அறிவியல் ஆய்வுகளுக்கு பிறகே அனுமதிக்க வேண்டும்; காடுகள் அழிக்கப்படுவதைத் தடுத்து, 'நிலச்சரிவு அபாய வரைபடங்களை' உடனுக்குடன் புதுப்பிக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்களும் நிபுணர்களும் வலியுறுத்துகின்றனர்.