கடைசி வாய்ப்பு... அண்ணா யூனிவர்சிட்டி அரியர் மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வு - டிச.10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!

 

அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் பயின்று, படிப்பை நிறைவு செய்வதற்கான அதிகபட்ச கால அவகாசம் முடிவடைந்த இளங்கலை மாணவ-மாணவிகளுக்குக் கடைசி வாய்ப்பாக சிறப்பு அரியர் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிசம்பர் 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

2008, 2013, 2017-ஆம் ஆண்டுகளில் முதலாம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி விதிமுறையின் கீழ் படித்தவர்கள் மற்றும் அந்த விதி அமலில் இருந்த காலகட்டத்தில் படித்தவர்களுக்கு, படிப்பை முடிக்க அதிகபட்ச கால வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அந்தக் கால அவகாசம் முடிந்ததால் வழக்கமான அரியர் தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு இந்தச் சிறப்புத் தேர்வு வாய்ப்பளிக்கப்படுகிறது.

சிறப்பு அரியர் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் வரும் டிசம்பர் 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை டிசம்பர் 15-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், தேர்வுகள் டிசம்பர் 21-ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சிறப்புத் தேர்வுக்கான பதிவுக் கட்டணமாகத் தன்னாட்சி மற்றும் தன்னாட்சி அல்லாத கல்லூரி மாணவர்கள் ரூ.5,000 செலுத்த வேண்டும். தன்னாட்சி அல்லாத கல்லூரி மாணவர்கள் பதிவுக் கட்டணத்துடன் சேர்த்து, தேர்வுக் கட்டணமாக ஒரு பாடத்திற்குக் கூடுதலாக ரூ.150 செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.