ஆடி கடைசி செவ்வாய்.. ஆயிரக்கணக்கில் திரண்ட பெண்கள்... குமரி அவ்வையார் கோவிலில் கூழ், பொங்கலிட்டு வழிப்பாடு!
ஆடி மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருள்மிகு அவ்வையார் அம்மன் கோவில் உட்பட பல்வேறு அம்மன் ஆலயங்களில் ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் திரண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.
தாழக்குடி அருகே அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அவ்வையார் அம்மன் கோவிலில், ஆடி கடைசி செவ்வாயை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றித் நெல்லை, தூத்துக்குடி மற்றும் அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் திரளான பெண்கள் குடும்பத்துடன் வருகை தந்தனர்.
கோவில் வளாகத்திலும் சுற்றியுள்ள தோப்புகளிலும் அமைக்கப்பட்ட இடங்களில், பெண்கள் தாங்களாகவே அரிசி மாவு, வெல்லம் கொண்டு கூழ், கொழுக்கட்டை மற்றும் சர்க்கரைப் பொங்கல் தயாரித்து அவ்வையார் அம்மனுக்குப் படைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மதியம் அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. திரளான பெண்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக நாகர்கோவிலில் இருந்து தாழக்குடி மற்றும் செண்பகராமன்புதூர் வழியாகக் கூடுதல் அரசுச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதே போலக் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவில் உள்ளிட்ட குமரி மாவட்டத்தின் முக்கிய அம்மன் தலங்களிலும் ஆடி கடைசி செவ்வாய் சிறப்பு பூஜைகள் விமர்சையாக நடைபெற்றன.