“சந்தி சிரிக்குது சட்டம் ஒழுங்கு” விளாத்திகுளம் வழக்கு... அலட்சியத்தின் உச்சத்தில் காவல்துறை... தொடரும் படுகொலைகளால் மக்கள் பீதி!

 

 "தமிழகம் அமைதிப் பூங்கா" என்கிற முழக்கம், கடந்த இரண்டு வார காலச் சம்பவங்களால் சுக்குநூறாக உடைந்து சிதறியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி படுகொலை செய்யப்பட்ட விவகாரம், தமிழக காவல்துறையின் முகத்திரையைக் கிழித்துள்ளது மட்டுமல்லாமல், சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதை அம்பலப்படுத்தியுள்ளது.

விளாத்திகுளம் துயரம்: ஒரு வாரமாகத் தூங்கிய போலீஸ்!

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை இயற்கை உபாதை கழிக்கச் சென்ற 17 வயது மாணவி மர்மமான முறையில் காணாமல் போனார். "என் புள்ளையக் காணோம்" எனத் தாய் ஓடி வந்து கதறியபோது, "நாளைக்குக் காலைல வாம்மா" என விரட்டியடித்தது தான் காவல்துறை செய்த முதல் சாதனை.

போலீசார் தேடத் தவறிய அந்தப் பிள்ளையை, மார்ச் 11-ஆம் தேதி ஊரே திரண்டு தேடியபோது, வீட்டின் அருகிலேயே முட்புதரில் வெட்டுக் காயங்களுடன் பிணமாகக் கண்டெடுத்தனர். ஆடைகள் கலைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட அந்தப் பிஞ்சு உடலைப் பார்த்துக் கிராமமே கதறியது. புகாரைத் தட்டிக்கழித்த இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.எஸ்.ஐ ஆகியோர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், போன உயிர் திரும்புமா?

இந்தக் கொலையில் கைதான தர்ம முனீஸ்வரன், ஏற்கனவே ஒரு பாலியல் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தவன். இப்படிப்பட்ட கொடூர கிரிமினல்கள் சுதந்திரமாக உலவுவதை உளவுத்துறை கோட்டை விட்டது ஏன்?

கடந்த 15 நாட்களில் நடந்த ‘இரத்தச் சரித்திரம்’: ஒரு பார்வை!

தமிழகத்தின் அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் அரங்கேறியுள்ள சில அதிர்ச்சிச் சம்பவங்கள்:

திருவள்ளூர் - பச்சிளம் உயிர் பறிபோன சோகம்:

கண் பார்வை குறைபாடுள்ள தாயின் 2 வயதுக் குழந்தை, தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம். குடும்பத் தகராறு மற்றும் கணவன் பிரிந்து சென்ற நிலையில், அந்தத் தாயின் அலறல் சத்தம் கேட்டும் உதவ முடியாத அவலம் திருவள்ளூரை உலுக்கியது.

அரசியல் ரோடு ஷோவில் விபத்து:

தவெக தலைவர் விஜய் பங்கேற்ற ரோடு ஷோவில், உற்சாகம் என்ற பெயரில் இளைஞர்கள் விபத்தில் சிக்கிக் காயமடைந்ததும், ஒரு பெண் மயங்கி விழுந்ததும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதில் நிலவும் குளறுபடிகளைக் காட்டுகிறது. ஒரே நாளில், ஒரே நிகழ்வில் அடுத்தடுத்து 5 விபத்துகள். அதுவும் கரூர் சம்பவத்திற்குப் பிறகும் போலீசாரின் அலட்சியப் போக்கை என்னவென்று சொல்வது?


 

போதை கும்பலின் அட்டகாசம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கஞ்சா கும்பலின் மோதல் காரணமாக கடந்த வாரம் மட்டும் மூன்று ரவுடிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பகல் நேரத்திலேயே பட்டாக்கத்திகளுடன் சுற்றும் கும்பல்களைக் கண்டு மக்கள் அஞ்சுகின்றனர்.

போதையில் 14 வயதுச் சிறுமியைத் துரத்திய கும்பல், தாம்பரம் அருகே ஏரிக்கரைக்குக் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கொடுமை பதற செய்கிறது. இதில் கைதானவர்களில் ஒருவன் அரசியல் கட்சியின் உள்ளூர் பிரமுகர் என்பது கூடுதல் வேதனை.

சேலத்தில் 66 வயது முதியவர் என்றும் பாராமல் ஒரு கும்பல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் போதைபொருட்களின் தலைமையிடமாக  தமிழகம் மாறி வருகிறதோ என்று பதற செய்கிறது. 

சென்னை அயனாவரத்தில் 7 வயதுச் சிறுமிக்கு இழைக்கப்பட்ட பாலியல் சீண்டல் தமிழகத்தைத் தாண்டியும் பதற செய்தது.

"தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சிறப்பாக உள்ளது" எனப் பெருமைப்பட்டுக் கொள்ளும் திமுக அரசு, மகளிர்க்கு ரூ.1000 உரிமைத் தொகைக் கொடுத்து வருவதால், அவர்கள் ஆதரவு இருப்பதாக சொல்லிக் கொள்வது கொடுமை.  அப்பா என்று சொல்லிக் கொள்வதில் இத்தனைக் கொடூரங்களுக்குப் பிறகும் என்ன பெருமை? என்று கல்லூரி மாணவிகள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை கொடுப்பதும், இலவச பேருந்து பயணமும் தானா சுதந்திரம்?

தமிழகத்தின் பெரும்பாலான பாலியல் குற்றங்களுக்குப் பின்னால், போதைக்கு அடிமையாகி இருக்கும் குற்றவாளி என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. ஆனாலும் இரும்புக்கரமெல்லாம் வேண்டாம்... சாதாரண கரம் கொண்டு கூட அதை அடக்க முற்படாமல், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பது என்று பேசுவதும், வடமாநிலங்களை விட, பாஜக ஆள்கின்ற மாநிலங்களை விட இங்கே குற்ற சம்பவங்கள் குறைவு என்று பெருமை பேசுவதற்குமா ஆட்சியை ஒப்படைத்தார்கள்?

இந்தக் கோரச் சம்பவங்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறது? ஒவ்வொரு முறை குற்றம் நடக்கும்போதும் 'கஞ்சா வேட்டை' எனப் பெயரளவில் ஒரு ரெய்டு நடத்துவதும், பிறகு அதுவே நீர்த்துப் போவதும் வாடிக்கையாகிவிட்டது.

பெண்களுக்கு எதிரான வன்முறை:

விளாத்திகுளம் சம்பவம் ஒரு சோறு பதம். இதுபோல மாநிலத்தின் பல பகுதிகளில் பள்ளி, கல்லூரி செல்லும் பெண்களுக்குப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. உளவுத்துறையும், ரோந்துப் பணிகளும் முடங்கிக் கிடப்பதாகப் புகார்கள் எழுகின்றன.

நிர்வாகச் சீர்கேடா? திட்டமிட்ட சதியா?

 கிரிமினல்கள் ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் அதே குற்றங்களைச் செய்வது, உளவுத்துறையின் மிகப்பெரிய தோல்வியாகவே பார்க்கப்படுகிறது.

"எங்க புள்ளைய நாங்களேதான் தேடி எடுத்தோம்" என்கிற அந்தத் தாயின் வார்த்தைகள், தமிழகத்தின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பு அமைப்பின் மீதும் விழுந்த சாட்டையடி. அரசு வெறும் ‘சஸ்பெண்ட்’ நடவடிக்கைகளுடன் நிறுத்திக்கொள்ளப் போகிறதா? அல்லது கிரிமினல்களின் கொட்டத்தை அடக்க இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப் போகிறதா? என்பதுதான் பொதுமக்களின் தற்போதைய கேள்வி!

தமிழகம் மீண்டும் அமைதிப் பூங்காவாக மாற வேண்டுமானால், காவல்துறையின் கைகள் கட்டப்படாமல், சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.