பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் டோல்கன் காலமானார் - 'பேக் டு தி ஃபியூச்சர்' ஸ்டிரிட்லேண்ட் மறைவு!
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட்டின் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகர் ஜேம்ஸ் டோல்கன், வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகத் தனது 94-வது வயதில் காலமானார். சுமார் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாகத் திரையுலகில் கோலோச்சிய இவரது மறைவுக்குப் பல ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஜேம்ஸ் டோல்கன் என்றாலே ரசிகர்களின் நினைவுக்கு வருவது அவரது கம்பீரமான மற்றும் கண்டிப்பான அதிகாரிக் கதாபாத்திரங்கள் தான். பேக் டு தி ஃபியூச்சர் (Back to the Future) படத்தின் மூன்று பாகங்களிலும் அவர் நடித்த 'மிஸ்டர். ஸ்டிரிட்லேண்ட்' (Mr. Strickland) கதாபாத்திரம் உலகப்புகழ் பெற்றது. குறிப்பாக, அவர் பயன்படுத்தும் "Slacker" என்ற வசனம் இன்றும் ரசிகர்களால் சிலாகிக்கப்படுகிறது. 1986-ல் வெளியான டாப் கன் (Top Gun) படத்தில் டாம் குரூஸுடன் இணைந்து 'ஸ்டிங்கர்' (Stinger) என்ற உயர் அதிகாரியாக நடித்து மிரட்டியிருப்பார். 1987-ல் வெளியான மாஸ்டர்ஸ் ஆஃப் தி யுனிவர்ஸ் படத்திலும் டிடெக்டிவ் லூபிக் (Detective Lubic) பாத்திரத்தில் அசத்தினார்.
ஜேம்ஸ் டோல்கனின் கம்பீரமான குரல் மற்றும் அவரது 'வழுக்கை' தலைத் தோற்றம், அவரை மற்ற நடிகர்களிடம் இருந்து தனித்துக் காட்டியது. 'வார் கேம்ஸ்' (WarGames), 'டிக்டிக்... பூம்!' (Tick, Tick... Boom!) போன்ற 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் அவர் முத்திரை பதித்துள்ளார். திரையில் அவர் ஏற்ற பெரும்பாலான பாத்திரங்கள் ராணுவ அதிகாரி, பள்ளி முதல்வர் அல்லது துப்பறியும் அதிகாரியாகவே அமைந்தன.
அவரது மறைவு குறித்து 'பேக் டு தி ஃபியூச்சர்' படத்தின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில், "அமைதியாக உறங்குங்கள் ஸ்டிரிட்லேண்ட் சார்! நீங்கள் இல்லாமல் அந்த ஹில் வேலி உயர்நிலைப் பள்ளி முழுமையடையாது" என்று உருக்கமாகப் பதிவிட்டு வருகின்றனர்.