எலுமிச்சம்பழம் விலை கிடுகிடு உயர்வு - கிலோ ரூ.280-க்கு விற்பனை!

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் எலுமிச்சம்பழத்திற்கான தேவை உயர்ந்ததன் எதிரொலியாக, அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ ரூ.280 வரை விற்பனை செய்யப்படுகிறது.

நாகர்கோவில் அப்டா மற்றும் வடசேரி மார்க்கெட்டுகளில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ரூ.150 முதல் ரூ.160 வரை விற்றுவந்த ஒரு கிலோ எலுமிச்சம்பழம், கடந்த வாரம் ரூ.250 ஆக உயர்ந்து, தற்போது ரூ.280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக ஒரு எலுமிச்சம்பழம் ரூ.10 முதல் ரூ.12 வரை விற்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக, பொதுமக்கள் குளிர்ச்சியான இயற்கை பானங்களை நாடுவதால் எலுமிச்சம்பழச் சர்பத் மற்றும் ஜூஸ்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.

புளியங்குடி மார்க்கெட்டிலிருந்து கன்னியாகுமரிக்கு எலுமிச்சம்பழங்கள் விற்பனைக்கு வரும் நிலையில், அப்பகுதியில் நிலவும் கடும் வெயில் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது. தேவை அதிகரித்த அதேவேளையில் வரத்து குறைந்ததே விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.