எலுமிச்சை விலை கிடுகிடு உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி!

 

தென்காசி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவிவரும் தீவிரமான வெயில் தாக்கம் மற்றும் தொடர்ச்சியான திருவிழாக் காலத் தேவைகளின் அதிகரிப்பு காரணமாக, எலுமிச்சை விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகளும் வியாபாரிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தின் முக்கிய விவசாய மையமான புளியங்குடி சந்தைக்கு வரும் எலுமிச்சைகளின் வரத்து கடந்த சில நாட்களாகக் குறைந்துள்ளது. மாநிலத்தில் நிலவும் கடும் வெயில் மற்றும் அவ்வப்போது வீசும் பலத்த காற்று காரணமாக, எலுமிச்சைச் செடிகளில் பூக்கள் மற்றும் காய்கள் பக்குவமடையாமல் உதிர்ந்துவிட்டன. இதனால் சந்தைக்குக் கிடைக்கும் எலுமிச்சையின் அளவு பாதியாகக் குறைந்துள்ளது.

மறுபுறம், பண்டிகைகள் மற்றும் திருவிழாக் காலங்கள் நெருங்கி வருவதால் பொதுமக்களிடையே எலுமிச்சக்கான தேவை சந்தையில் திடீரென பல மடங்கு அதிகரித்துள்ளது. தேவையும் வரத்துக் குறைவும் ஒரே நேரத்தில் சந்தித்துக் கொண்டதால், இதற்கு முன்பு கிலோ ஒன்றுக்கு ரூ.170 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த எலுமிச்சை, தற்போது கிடுகிடுவென உயர்ந்து ரூ.225 வரை விற்கப்பட்டு வருகிறது.

விலை உயர்வு தங்களுக்கு ஓரளவு லாபத்தைத் தந்தாலும், எதிர்காலத்தில் விலை வீழ்ச்சியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், அதிகப்படியான விளைச்சலை வீணாக்காமல் பாதுகாக்கவும் அரசு தரப்பிலிருந்து சில முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, எலுமிச்சையைக் கொண்டு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளைப் இப்பகுதியில் அமைப்பதற்கு அரசு உரிய உதவிகளைச் செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.