102 ஆண்டுகள்... ரஷிய புரட்சித் தலைவர் லெனின் உடல் சிதையாத ரகசியம்!
உலக வரலாற்றில் மிக முக்கியமான கம்யூனிச புரட்சித் தலைவராகக் கருதப்படுபவர் விளாடிமிர் லெனின். ரஷியாவில் சோவியத் யூனியனை உருவாக்கியவரான இவர் கடந்த 1924ம் ஆண்டு ஜனவரி மாதம் 21ம் தேதி இயற்கை எய்தினார். அவரது மறைவுக்குப் பின், அவரது உடலை அடக்கம் செய்யாமல் நீண்ட காலத்திற்குப் பொதுமக்களின் பார்வைக்காகப் பாதுகாத்து வைக்க சோவியத் அரசு ஒரு வினோதமான முடிவை எடுத்தது.
இதற்காக ரஷிய விஞ்ஞானிகள் ஒரு புதிய இரசாயனக் கலவையைப் பயன்படுத்தி அவரது உடலைத் துல்லியமாகப் பதப்படுத்தும் பணியைத் தொடங்கினர். மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தின் நடுவே ஒரு பிரத்யேகக் கல்லறை அமைக்கப்பட்டு, அங்கு லெனினின் உடல் பொதுமக்கள் பார்வைக்காகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. ஒவ்வொரு வாரமும் விஞ்ஞானிகள் குழுவினர் அவரது உடலைத் தீவிரமாகக் கண்காணித்து, குறிப்பிட்ட வெப்பநிலையில் உடலின் ஈரப்பதம் குறையாமல் தொடர்ந்து பராமரித்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறையும் அவரது உடலைத் தனியாக எடுத்து, இரசாயனக் குளியல் செய்து ஆடைகளை மாற்றுவது இன்றுவரை வழக்கமாக உள்ளது. லெனின் மறைந்து நூறு ஆண்டுகளைக் கடந்த நிலையிலும், அவரது உடல் இன்னும் இயற்கை நிற மாறாமல் அப்படியே இருப்பது உலக அளவில் வியப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த உடலைப் பராமரிப்பதற்காகவே ரஷிய அரசு ஆண்டுதோறும் பெரும் தொகையைத் தொடர்ந்து செலவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.