ராஜஸ்தானில் பூங்காவுக்குள் புகுந்த சிறுத்தை: 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மீட்பு!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு பொழுதுபோக்குப் பூங்காவுக்குள் சிறுத்தை புகுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வனத்துறையினரால் அது வெற்றிகரமாகப் பிடிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் 'சத்ரா விலாஸ் கார்டன்' என்ற பொழுதுபோக்குப் பூங்கா அமைந்துள்ளது. வழக்கம் போல் நேற்று காலை அப்பகுதியில் மக்கள் நடைப்பயிற்சி, யோகா மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது பூங்காவின் ஒரு பகுதியில் சிறுத்தை ஒன்று நடமாடுவது தெரியவந்தது.
இதனைக்கண்டு பொதுமக்களிடையே கடுமையான பீதி ஏற்பட்டது. உடனே விழித்துக்கொண்ட பூங்கா நிர்வாகம், அங்கிருந்தவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றிப் பூங்காவின் நுழைவாயிலை மூடியது. மேலும், அப்பகுதியில் போலீசாரும் ஆயுதப் காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சிறுத்தை புகுந்த செய்தி பரவியதால் பூங்காவைச் சுற்றிலும் ஏராளமான பொதுமக்கள் கூடினர்.
பார்வையாளர்களின் கூச்சலைக் கேட்டுப் பதற்றமடைந்த அந்தச் சிறுத்தை, அங்கிருந்த 40 அடி உயரமுள்ள நாவல் மரத்தின் உச்சி கிளைக்கு ஏறிச் சென்றது. தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறைக் குழுவினர், கால்நடை மருத்துவரின் அறிவுறுத்தலின்படி கீழிருந்து மயக்க மருந்து செலுத்தும் அம்பு மூலம் சிறுத்தையைச் சுட முயன்றனர்.
சிறுத்தை கீழே விழுந்து அடிபடாமல் தடுப்பதற்காக மரத்தின் கீழே பாதுகாப்பு வலை விரித்து அமைக்கப்பட்டது. மீட்புக் குழுவினர் மரத்தின் உச்சியில் இருந்த சிறுத்தைக்கு எதிராக 5 முறை மயக்க மருந்து அம்புகளைச் செலுத்தினர். மரத்தின் அடர்த்தி காரணமாக முதல் 4 முயற்சிகள் தோல்வியடைந்தாலும், ஐந்தாவது இறுதி முயற்சி வெற்றிகரமாக அமைந்தது.
மயக்க மருந்து வேலை செய்ததைத் தொடர்ந்து, சிறுத்தை தூக்கக் கலக்கத்தில் கீழே விரிக்கப்பட்டிருந்த வலையில் விழுந்தது. இதன் மூலம் 3 மணி நேரப் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த அதிரடி மீட்பு நடவடிக்கையில் 2 கால்நடை மருத்துவர்கள் உள்பட 25 பேர் கொண்ட குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
பின்னர் மீட்கப்பட்ட சிறுத்தை மேல் சிகிச்சை மற்றும் கண்காணிப்புக்காக 'அபேடா உயிரியல் பூங்கா'வுக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில், "சிறுத்தையின் பாலினம் மற்றும் சரியான வயதைக் கண்டறிய அதற்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு உயிரியல் பூங்காவில் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்படும்; அதன்பிறகு அந்தச் சிறுத்தை வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்படும்" என்றார்.