தாயின் கண்முன், வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை கவ்விச் செல்ல முயன்ற சிறுத்தை - வால்பாறையில் பயங்கரம்!
கோவை மாவட்டம் வால்பாறை அருகே தேயிலை தோட்டத் தொழிலாளர் குடியிருப்புப் பகுதியில் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுவனைச் சிறுத்தை கவ்விச் செல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
வால்பாறை அருகே உள்ள அப்பர்பாரளை எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பில் வசிக்கும் குருசாமி - நாகஜோதி தம்பதியினரின் 5 வயது மகன் தீட்சிதன், வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அருகில் உள்ள புதர் செடிகளுக்குள் பதுங்கியிருந்த சிறுத்தை ஒன்று திடீரென்று வெளியேறிச் சிறுவனைக் கடிக்கத் தொடங்கியது.
சிறுவனின் தலையைக் கடித்து இழுத்துச் செல்ல முயன்ற சிறுத்தையைக் கண்டு தாய் நாகஜோதியும், அவ்வழியாக ஓடிவந்த ரமேஷ் என்ற தொழிலாளியும் கூச்சலிட்டனர். பொதுமக்கள் கூச்சலிட்டதையடுத்து, சிறுவனை விட்டுவிட்டுச் சிறுத்தை மீண்டும் புதருக்குள் ஓடி மறைந்தது.
தலையில் படுகாயம் அடைந்த சிறுவன் தீட்சிதன் உடனடியாக அய்யர்பாடி எஸ்டேட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, முதலுதவிக்குப் பின் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டான். காது மற்றும் தலையில் தொடர்ந்து ரத்தம் வடிந்ததால், எஸ்டேட் நிர்வாகத்தினரின் உதவியுடன் மேல் சிகிச்சைக்காகக் கோவை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, வனச்சரக அதிகாரி சுரேஷ் கிருஷ்ணா உத்தரவின் பேரில் மனித - வனவிலங்குகள் மோதல் தடுப்புப் படையினர் அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், குழந்தைகளைத் தனியாக வெளியே விளையாட அனுமதிக்க வேண்டாம் என்றும், குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றியுள்ள புதர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் எஸ்டேட் நிர்வாகத்திற்கும் பொதுமக்களுக்கும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.