வால்பாறையில் சிறுத்தைப்புலிகள் நடமாட்டம்... குழந்தைகளைத் தனியாக வெளியே அனுப்ப வனத்துறை தடை!
கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரத் தேயிலைத் தோட்டப் பகுதிகளில் சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. தற்போது பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், குழந்தைகள் வீடுகளில் இருக்கும் சூழலில் அவர்களின் பாதுகாப்புக் குறித்து வனத்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் எஸ்டேட் குடியிருப்புப் பகுதிகளில் சிறுத்தைப்புலிகள் நடமாடுவது கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, எஸ்டேட் பகுதியில் வசிக்கும் தொழிலாளர்கள் தங்களது குழந்தைகளைத் தனியாகக் கடைகளுக்குப் பொருட்கள் வாங்க அனுப்ப வேண்டாம் என்று வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. மாலை நேரங்களில் குழந்தைகளை வீட்டுக்கு வெளியே விளையாட அனுமதிக்கக் கூடாது என்றும், தேயிலைச் செடிகள் அடர்த்தியாக உள்ள பகுதிகளில் குழந்தைகளை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வனவிலங்குகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ளப் பெற்றோர் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், விடுமுறை நாட்களில் சிறுவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்று காவல்துறையினரும் எச்சரித்துள்ளனர். வனப்பகுதிகளை ஒட்டியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் வனத்துறையினர் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கப் பொதுமக்கள் வனத்துறையினரின் அறிவுரைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும், வனவிலங்குகள் தென்பட்டால் உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் வனச்சரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.