"புதுச்சேரியை சிங்கப்பூர் போல மாற்றுவோம்!" - லாட்டரி மார்ட்டின் மகன் தேர்தல் வாக்குறுதி!

 

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிடும் லட்சிய ஜனநாயகக் கட்சி, தனது தேர்தல் வியூகங்கள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த வாக்குறுதிகளால் அரசியல் களத்தில் அனலைக் கிளப்பியுள்ளது. அக்கட்சியின் வேட்பாளர் ஜோஸ் சார்லஸ் மார்டின், புதுச்சேரியின் வளர்ச்சிக்காகச் சர்வதேசத் தரத்திலான திட்டங்களை முன்வைத்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தால் ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு 'தர்பூசணி' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தப் போவதாகத் தெரிவித்துள்ள அவர், தனது இலக்குகள் குறித்துப் பேசியதாவது:

"புதுச்சேரியை வெறும் இந்திய நகரமாகப் பார்க்காமல், சிங்கப்பூர், துபாய் அல்லது ஹாங்காங் போன்ற உலகத்தரம் வாய்ந்த வர்த்தக மற்றும் சுற்றுலா மையமாக மாற்றுவதே எனது லட்சியம்."

"இதற்காகச் சிங்கப்பூரைச் சேர்ந்த முன்னணி ஆலோசகர்களுடன் இணைந்து, 2050-ஆம் ஆண்டு வரையிலான நீண்ட காலத் திட்ட வரைபடத்தைத் தயாரித்துள்ளோம். இது வெறும் வெற்று வாக்குறுதி அல்ல, முறையான திட்டமிடல்," என அவர் தெரிவித்தார்.

புதுச்சேரி இளைஞர்களுக்குத் துபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ளது போன்ற நவீன தொழில்நுட்பப் பூங்காக்கள் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்.

பிரெஞ்சு கலாச்சாரம் மாறாமல், கடற்கரைப் பகுதிகளைச் சர்வதேசத் தரத்திற்குத் தரம் உயர்த்துதல். அரசு சேவைகள் அனைத்தையும் வெளிப்படையான டிஜிட்டல் முறைக்கு மாற்றுதல்.

காங்கிரஸ்-திமுக கூட்டணி மற்றும் பாஜக-என்.ஆர். காங்கிரஸ் கூட்டணிக்கு இடையே கடும் போட்டி நிலவும் புதுச்சேரியில், ஜோஸ் சார்லஸ் மார்டினின் இந்த 'சிங்கப்பூர்' மாடல் வாக்குறுதி, குறிப்பாக இளைஞர்கள் மற்றும் படித்த வாக்காளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.