"பதற்றம் இல்லாமல் தைரியமாக முடிவுகளை பார்ப்போம்" - 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அன்பில் மகேஷ் வாழ்த்து!

 

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், "மாணவச் செல்வங்கள் யாரும் பதற்றமடையாமல் தைரியமாகத் தங்களின் தேர்வு முடிவுகளை எதிர்கொள்ள வேண்டும்" என முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்துகளையும் அறிவுரைகளையும் தெரிவித்துள்ளார்.

நடப்பு 2025-26-ம் கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 20) காலை 9.30 மணிக்குச் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில், த.வெ.க அரசின் புதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனால் முறைப்படி வெளியிடப்பட்டது.

மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலமாகவும், டிஜிலாக்கர் செயலி வழியாகவும் தங்களின் மதிப்பெண்களைத் தெரிந்து கொண்டு வருகின்றனர். இதுதவிர, மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்களுக்கும் குறுஞ்செய்தி மூலமாகத் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மாணவர்களுக்குத் தைரியம் அளிக்கும் வகையில் முக்கியப் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர், "10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கியுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்தத் தேர்வு முடிவு என்பது வெறும் உங்களுக்கான ரிசல்ட் மட்டுமல்ல! நம்முடைய ஆசிரியப் பெருமக்களின் கற்பித்தல் செயல்பாடுகள் எந்தளவிற்கு வெற்றி பெற்றுள்ளன என்பதை அறிவதற்கும், தமிழகத்தில் தேர்ச்சி விகிதத்தை மேலும் அதிகப்படுத்த அரசு அடுத்ததாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன? என எல்லாவற்றையும் மதிப்பிடுவதற்கான ஒரு ரிசல்ட்-தான் இது."

"ஆகவே, மாணவர்கள் யாரும் தங்களின் மதிப்பெண்கள் குறித்து வீணாகப் பதற்றம் அடையாமல், மிகவும் தைரியமாக முடிவுகளைப் பார்க்க வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துகள்," என அன்பில் மகேஷ் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுள்ள சூழலில், புதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக ராஜ்மோகன் முதன்முறையாக இந்த பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் அமைச்சரின் இந்த நேர்மறையான வாழ்த்துப் பதிவு, தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருந்த மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் பெரும் ஆறுதலாகவும், ஊக்கமாகவும் அமைந்துள்ளது.