குடிபோதையில் கார் ஓட்டிய விவகாரம்...  பெண் யூடியூபர் ஓட்டுனர் உரிமம்   ரத்து!

 

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த தன்யா என்பவர் பிரபல யூடியூபராகச் செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த மாதம் 1 ஆம் தேதியன்று காசர்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுவிட்டுத் தனது காரில் வீடு திரும்பியுள்ளார். அப்போது அவர் மது அருந்திவிட்டுப் பாதுகாப்பற்ற முறையில் காரை இயக்கி வந்ததாகக் கூறப்படுகிறது.

வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரைக் கண்டதும் காரை நிறுத்தாமல் அங்கிருந்து மிக வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். இதனால் உஷாரான காவல்துறையினர் தங்கள் வாகனத்தின் மூலம் காரைப் பின்தொடர்ந்து சென்று அவரை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் அவர் மது அருந்தியது உறுதியானதை அடுத்துக் காசர்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்யப்பட்டது.

மருத்துவப் பரிசோதனையிலும் மது அருந்தியிருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்துக் காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து காரைப் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய பெண் யூடியூபர் தன்யாவின் ஓட்டுநர் உரிமத்தை மூன்று மாதங்களுக்கு ரத்து செய்து போக்குவரத்துத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் அவர் மூன்று நாட்கள் கட்டாயப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.