உயிருக்கே ஆபத்து... தமிழகம் முழுவதும் பாராகுவாட் டைகுளோரைடு மருந்துக்கு தடை - 35,415 லிட்டர் பறிமுதல்!

 

பாராகுவாட் டைகுளோரைடு களைக்கொல்லி மருந்தின் உற்பத்தி, இறக்குமதி, போக்குவரத்து, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றிற்குத் தமிழ்நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அறிவித்துள்ளது. சிறப்புக் குழுக்கள் நடத்திய ஆய்வில் இதுவரை 35,415 லிட்டர் பாராகுவாட் டைகுளோரைடு மருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நச்சுத்தன்மை கொண்ட பாராகுவாட் டைகுளோரைடு களைக்கொல்லிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் 25 அன்று வெளியிடப்பட்ட அரசிதழ் எண்.501 மூலம் இத்தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

பாராகுவாட் டைகுளோரைடு மருந்தை உற்பத்தி செய்வது, இறக்குமதி செய்வது, கொண்டு செல்வது, விநியோகிப்பது, விற்பனை செய்வது மற்றும் பயன்படுத்துவது முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

இம்மருந்திற்குப் புதிய பதிவுகள் எதுவும் அனுமதிக்கப்பட மாட்டாது. பூச்சிக்கொல்லி மருந்துகள் சட்டம் 1968-ன் பிரிவு 9-ன் கீழ் வழங்கப்பட்ட அனைத்துப் பதிவுச் சான்றிதழ்களும் ரத்து செய்யப்பட்டதாகக் கருதப்படும் என்றும், அவற்றை உற்பத்தியாளர்கள் உடனடியாக மத்திய பூச்சிக்கொல்லி வாரியம் மற்றும் பதிவு குழுவிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் வேளாண்மை உதவி இயக்குநர்கள் தலைமையிலான சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, உற்பத்தி நிலையங்கள், விநியோக நிறுவனங்கள் மற்றும் சில்லரை விற்பனை நிலையங்களில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் இருப்பில் வைக்கப்பட்டிருந்த 35,415 லிட்டர் களைக்கொல்லி மருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட மற்றும் வட்டார அளவிலான வேளாண்மை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தடையை மீறிச் செயல்படுவோர் மீது பூச்சிக்கொல்லி மருந்துகள் சட்டம் 1968 மற்றும் விதிகள் 1971-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள், உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் கேட்டுக்கொண்டுள்ளார்.