உயிருக்கே ஆபத்து... திணறுது மூச்சு... டெல்லியில் AQI 444 ஆக உயர்ந்த நச்சுப் புகை மண்டலம்... தடையை மீறி பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாட்டம்!

 

தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டங்களைத் தொடர்ந்து நாட்டின் தலைநகரான புதுடெல்லியில் காற்றின் தரக் குறியீடு மிக மோசமடைந்து 'ஆபத்தான'  நிலையை எட்டியுள்ளது.

டெல்லியில் தீபாவளி பண்டிகையின் போது உச்ச நீதிமன்ற நிபந்தனைகளுடன் பசுமை பட்டாசுகளை வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், தடையை மீறி பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் நகர் முழுவதும் நச்சுப் புகை சூழ்ந்துள்ளது. பண்டிகைக் கொண்டாட்டங்களுக்குப் பிறகு டெல்லியின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 380 முதல் 444 வரை உயர்ந்து அதிர்ச்சியளித்துள்ளது.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/nmjsrRKjjkM?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/nmjsrRKjjkM/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" title="YouTube video player" width="560">

தீபாவளி பட்டாசுப் புகை, குளிர்கால பனிக்காற்று மற்றும் அண்டை மாநிலங்களில் விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுதல் ஆகிய மூன்று காரணங்களும் ஒன்றாக இணைந்து நகரத்தை அடர்ந்த புகைமண்டலமாக மாற்றியுள்ளன.

நகரின் பெரும்பாலான இடங்களில் எதிரே வரும் வாகனங்கள் மற்றும் கட்டடங்கள் தெளிவாகத் தெரியாத அளவுக்குப் புகைமூட்டம் கப்பியிருப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலத்தில் நச்சுப் புகையின் அளவு அதிகரித்துள்ளதால், குறிப்பாக முதியவர்கள், சிறு குழந்தைகள் மற்றும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல், தொண்டை எரிச்சல் மற்றும் கண் எரிச்சல் உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் கடுமையாக அதிகரித்துள்ளன.

அத்தியாவசியத் தேவைகளின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்றும், வெளியே செல்லும் வேளையில் கட்டாயம் N95 முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் சுகாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

காற்றின் தரத்தை சீரமைக்க டெல்லி அரசு மற்றும் மாநகராட்சி சார்பில் முக்கியச் சாலைகளில் தண்ணீர் தெளிக்கும் பணிகளும், மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.