மின்னல் தாக்கி 15 செம்மறி ஆடுகள் பலி; கனமழையால் 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து சேதம்!

 

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நீடித்து வரும் வேளையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை இடி, மின்னலுடன் கூடிய பயங்கர கனமழை கொட்டித் தீர்த்தது.

இந்த திடீர் இயற்கை சீற்றத்தின் காரணமாக, ஓமலூர் அருகே மின்னல் தாக்கி 15 செம்மறி ஆடுகள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தன. மேலும், சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையால் 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்ததுடன், முப்பதுக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்து மின்விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வேப்பிலை ஊராட்சி, செக்காரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி மாதையன் (50). நடுத்தர விவசாயியான இவர், விவசாயப் பணிகளுடன் சேர்த்து வாழ்வாதாரத்திற்காகத் தனது தோட்டத்தில் செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். 

நேற்று மாலை இப்பகுதியில் திடீரென வானில் கருகருவென மேகங்கள் சூழ்ந்து, பலத்த சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது. மழை தீவிரமடைந்த வேளையில், யாரும் எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன் கூடிய இடி-மின்னல் விவசாயி மாதையனின் தோட்டப் பகுதியில் தாக்கியது. இந்த கொடூர மின்னல் தாக்கலில், அவர் வளர்த்து வந்த 15 செம்மறி ஆடுகள் மீது மின்சாரம் பாய்ந்து, அவை அனைத்தும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தன.

கண்ணிமைக்கும் நேரத்தில் வாழ்வாதாரமாக இருந்த 15 ஆடுகளும் பலியானதைக் கண்டு விவசாயி மாதையன் மற்றும் அவரது குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறியது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

ஓமலூர் பகுதி மட்டுமன்றி, அதன் அண்டை கிராமங்களான குண்டுகல் மற்றும் ஒலக்கூர் ஆகிய பகுதிகளிலும் மழையின் வீரியம் மிக அதிகமாக இருந்தது. இப்பகுதிகளில் பெய்த அசாத்திய கனமழையின் போது, அசுர வேகத்தில் வீசிய சூறாவளிக் காற்றினால் ஒட்டுமொத்த விவசாய நிலங்களும் நிலைகுலைந்தன.

அறுவடைக்குத் தயாராக இருந்த மற்றும் தார் விட்டு வளர்ந்திருந்த 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வேரோடும், நடுப்பகுதியிலும் முறிந்து விழுந்து தரமட்டமாகின. பல மாதங்களாகக் கடன் வாங்கி, அரும்பாடுபட்டு வளர்த்த வாழை மரங்கள் அனைத்தும் ஒரே நாளில் அழிந்து போனதால், இப்பகுதி விவசாயிகள் தங்களுக்குப் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கண்ணீருடன் வேதனை தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் உடனடியாக நேரில் பார்வையிட்டு, உரிய சேத மதிப்பீடு செய்து தங்களுக்குத் தகுந்த நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கனமழை மற்றும் பலத்த காற்றின் காரணமாகப் பல்வேறு இடங்களில் மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்ததாலும், காற்றின் வேகம் தாங்க முடியாமலும் ஓமலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் அடியோடு முறிந்து விழுந்தன. உயர் அழுத்த மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால், அப்பகுதிகளில் உடனடியாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டு பெரும் விபத்துக்கள் தவிர்க்கப்பட்டன.

ஆனாலும், முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் முற்றிலும் இருளில் மூழ்கின. இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளில் களமிறங்கியுள்ளனர். "சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பங்களை நடுவதற்கான பணிகள் தற்பொழுது மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அறுந்து விழுந்த மின் கம்பிகளைச் சீரமைக்கும் பணியில் கூடுதல் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விரைவில் அனைத்துப் பகுதிகளுக்கும் மின் விநியோகம் முழுமையாகச் சீரமைக்கப்படும்."

பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை மற்றும் வழிகாட்டுதல்கள்

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு இடி-மின்னலுடன் கூடிய மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், பொதுமக்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இடி, மின்னல் ஏற்படும் போது பொதுமக்கள் யாரும் திறந்தவெளிகளிலோ அல்லது உயரமான மரங்களின் கீழோ தஞ்சமடையக் கூடாது. விவசாயிகள் தங்களது ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மின் கம்பங்கள், மரங்கள் அல்லது இரும்பு வேலிகளுக்கு அருகில் கட்டாமல், பாதுகாப்பான கொட்டகைகளில் அடைக்க வேண்டும்.

பலத்த இடி இடிக்கும் போது வீட்டில் உள்ள தொலைக்காட்சி, கணினி மற்றும் குளிர்சாதனப் பெட்டி போன்ற மின் சாதனங்களின் இணைப்பைத் துண்டிப்பது பாதுகாப்பானது.