பாஜகவில் இணையும் லீமா ரோஸ் மார்ட்டின்... நிர்மலா சீதாராமனுடன் திடீர் சந்திப்பு!
தமிழகச் சட்டமன்றப் பொதுத்தேர்தல் முடிவுகளுக்குப் பின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கடுமையான உட்கட்சிப் பூசல்களையும், நிர்வாகிகளின் வெளியேற்றத்தையும் சந்தித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் எஸ்பி வேலுமணியின் ஆதரவாளர்களான 4 முக்கிய அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு ஆளும்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த அதிர்ச்சி விலகுவதற்குள், கட்சியின் மற்றொரு முக்கியப் பிரமுகரான லீமா ரோஸ் மார்ட்டின் பாஜகவின் முக்கியத் தலைமையுடன் நடத்தியுள்ள சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் புது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அதிமுகவின் முக்கியப் பெண் முகங்களில் ஒருவரான லீமா ரோஸ் மார்ட்டின், டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவின் உள் கட்டமைப்பு பலவீனமடைந்து, கட்சி இரண்டு பிரிவுகளாக உடையும் அபாயத்தில் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்த அசாதாரணச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு தவெக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுமே அதிமுகவின் அதிருப்தி நிர்வாகிகளையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் தங்களது பக்கம் இழுக்கத் தீவிரமாக களம் இறங்கியுள்ளன.
இதன் முதற்கட்டமாக, ஆளும்கட்சியான தவெக நேற்றைய தினம் அதிமுகவின் 4 விக்கெட்டுகளைச் சாய்த்த நிலையில், தேசியக் கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் தனது உத்திகளைத் துரிதப்படுத்தியுள்ளது. லீமா ரோஸ் மார்ட்டின் மற்றும் மத்திய அமைச்சரின் இந்த திடீர் சந்திப்பு அதன் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடனான இந்த சந்திப்பு வெறும் 'மரியாதை நிமித்தமானது' என லீமா ரோஸ் மார்ட்டின் தரப்பில் கூறப்பட்டாலும், இதன் பின்னணியில் ஆழமான அரசியல் காரணங்கள் இருப்பதாகத் டெல்லி மற்றும் சென்னை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் தவெக-வின் வளர்ச்சியைத் தடுத்து, தங்களை முதன்மை எதிர்க்கட்சியாக நிலைநிறுத்திக் கொள்ளப் பலமான ஆளுமைகளைச் சேர்க்க பாஜக திட்டமிட்டு வருகிறது.
அதிமுகவின் தற்போதைய தலைமையின் மீதான அதிருப்தி காரணமாக, லீமா ரோஸ் மார்ட்டின் விரைவில் தனது ஆதரவாளர்களுடன் அதிகாரப்பூர்வமாகப் பாஜகவில் இணைவதற்கான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையே இந்த சந்திப்பு எனக் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு விபரம், அதிமுகவின் தலைமையை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன், தென்மாவட்ட மற்றும் கொங்கு மண்டல அதிமுக நிர்வாகிகளிடையேயும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அடுத்தடுத்த கட்சித் தாவல்களால் தமிழகத்தின் எதிர்கால அரசியல் வரைபடம் முற்றிலும் மாறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.