மாஸ் காட்டிய சிங்கப்பெண் அதிரடிப்படை... 258 புகார்களுக்கு உடனடி நடவடிக்கை!

 

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் செயல்பட்டு வரும் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படையின் ஒரு வார காலச் செயல்பாடுகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. செப்டம்பர் 4 முதல் செப்டம்பர் 10 வரையிலான காலத்தில் சிங்கப்பெண் களப்பிரிவினரின் நடவடிக்கைகள் மூலமாகப் பல்வேறு முக்கியப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன: பெறப்பட்ட 258 புகார்களுக்குச் சம்பவ இடத்திலேயே உடனடியாகத் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

14 குற்றவழக்குகள் பதிவு செய்யப்படுவதற்கு உதவி செய்யப்பட்டுள்ளதுடன், ஆபத்தில் சிக்கிய 4 பெண்கள் மற்றும் 4 குழந்தைகள் மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 3,484 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பாதுகாப்புடன் இருக்க வேண்டிய 13,581 இடங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டுள்ளன. அறிவுசார் குறைபாடுகள் கொண்ட 6 நபர்கள் மீட்கப்பட்டுள்ளனர்; மேலும் 6 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன், பள்ளிப்படிப்பை இடைநிறுத்திய 71 குழந்தைகள் மீண்டும் கல்வியைத் தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் சிங்கப்பெண் சிறப்புப் படையினர் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியின்போது ஒரு திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. அங்கு 9-ம் வகுப்பு பயிலும் 14 வயது மாணவன் ஒருவன், தன்னை சில நபர்கள் ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், கடந்த மூன்று மாதங்களாக மிரட்டித் துன்புறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளான்.

இதனைத் தொடர்ந்து உடனடியாகச் செயல்பட்ட சிங்கப்பெண் படையினர், காவல் நிலையத்திற்கும் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்து முறைப்படி புகார் அளிக்க உதவினர். அதன்பேரில் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

பெண்கள் மற்றும் சிறுமிகள் எங்குனும், எத்தகைய இக்கட்டான சூழலிலும் தயக்கமின்றி முன்வந்து உதவி பெறலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் உடனடித் தலையீட்டிற்குப் பொதுமக்கள் '1091' என்ற சிங்கப்பெண் உதவி எனைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.