undefined

லிப்ஸ்டிக் போட்ட தபேதார் பணியிட மாற்றம்?! மேயர் பிரியா விளக்கம்!

 

லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு பணிக்கு வந்ததால் சென்னை மேயரின் தபேதார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் சென்னை மேயர் பிரியா இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். 

சென்னை மேயர் ப்ரியாவின் தபேதாராக இருந்தவர் மாதவி (50). மேயர் செல்லும் இடங்களில் அரசு சம்பந்தமாக கூட்டங்கள், நிகழ்ச்சிகளுக்கு செல்வோர் இவரை கட்டாயம் பார்க்கலாம். அதற்கு ஒரு காரணமும் உண்டு. எப்போதும் தபேதார் சீருடையில் இருக்கும் அவர் தமது உதட்டுக்கு லிப்ஸ்டிக் பூசிக் கொண்டு வருவதை வழக்கமாக கொண்டதாக தெரிகிறது.

எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள், அதிகாரிகள், மக்கள் நல திட்ட நிகழ்ச்சிகள் என எங்கும் எந்நேரமும் பரபரப்புடன் மேயர் ப்ரியா செல்லும் போது அவரது முன்னே மாதவியும் அதே லிப்ஸ்டிக் பூசி பந்தாவாக சென்று வந்ததாக கூறப்படுகிறது. மேலும், மகளிர் தினத்தின் போது ரிப்பன் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பேஷன் ஷோவில் மாதவி கலந்து கொண்டது பார்ப்போரை ஆச்சரியப்பட வைத்துள்ளதோடு விமர்சனங்களை எழுப்பியதாகவும் தெரிகிறது.

அவரின் இதுபோன்ற நடவடிக்கைகளை அறிந்த மேயரின் தனி உதவியாளர் சிவசங்கர் என்பவர் மாதவியை அழைத்து விவரம் கேட்டுள்ளார். உதட்டுக்கு சாயம் பூசிக் கொண்டு வருவது கூடாது என்றும் அவர் கண்டித்துள்ளார். ஆனால் தனி உதவியாளரின் பேச்சை கேளாமல் மாதவி உதட்டுச்சாயத்துடன் உலா வந்ததாகவும், லிப்ஸ்டிக் போடக்கூடாது என்று அரசாணை ஏதும் இருக்கிறதா என்று கேட்டதாகவும் தெரிகிறது. 

இதையடுத்து, அவர் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு கோரி, ஆகஸ்ட் 6ம் தேதி மெமோவும் வழங்கப்பட்டு உள்ளது. அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு கீழ்படியவில்லை, என்ன காரணம் என்று கூறுமாறு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. 

அதற்கு பதில் அளித்த தபேதார் மாதவி, இது போன்ற அறிவுறுத்தல்கள் மனித உரிமைக்கு எதிரானது. யாரிடமும் பேசக் கூடாது, உதட்டுச்சாயம் அணியக்கூடாது என்று எந்த அரசாங்க உத்தரவும் இல்லை. அதுபோன்ற உத்தரவுகள் இருந்தால் காட்டுங்கள் என்று கூறி உள்ளார். அதையே தமது விளக்கமாகவும் மேயரின் உதவியாளருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். மாதவியின் விளக்கத்தை ஏற்க மறுத்து, அவரை உடனடியாக மணலிக்கு இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், நேற்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் மாதவி லிப்ஸ்டிக் பயன்படுத்தியதால் தான் இடமாற்றம் செய்யப்பட்டார் என்பதை மேயர் பிரியாவின் அலுவலகம் தரப்பில் முற்றிலுமாக மறுத்துள்ளது. மேயர் பிரியா அலுவலகம் சார்பில், மாதவி பணி இடமாற்றத்துக்கு லிப்ஸ்டிக் பயன்படுத்தியது தான் காரணம் என கூறுவது தவறானது.

அவர் உரிய நேரத்திற்கு பணிக்கு வராதது, சீனியர்களின் உத்தரவை மதிக்காதது உள்ளிட்ட காரணங்களால் மாதவிக்கு மெமோ அனுப்பப்பட்டதாகவும் அதற்கு அவர் உரிய பதில் அளிக்கவில்லை. பணியை சரிவர செய்யாத காரணத்தால் தான் மெமோ கொடுக்கப்பட்டு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மேயர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

இதன் மூலம் மாதவியின் பணியிடமாற்றத்துக்கு லிப்ஸ்டிக்கை காரணம் சொல்ல முடியாது என மேயர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. மாதவி ஏன் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்? என்பது தொடர்பாக பரபரப்பான தகவல் கிடைத்துள்ளது. அதாவது சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுக்கும், துணை மேயர் மகேஷ் குமார் இடையே பிரச்சனை உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பிரச்சனை வெளிப்படையாக தெரியாமல் இருந்தாலும் கூட இருவருக்கும் இடையே மனக்கசப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் மேயர் பிரியாவின் அறையில் நடக்கும் விஷயங்களை மாதவி துணை மேயர் மகேஷுக்கு கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இது மேயர் பிரியாவுக்கு பிடிக்கவில்லை. இதனால் தான் மாதவி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் புதிய தகவல் கிடைத்துள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!