மது போதையில் நேர்ந்த சோகம்: மாடியில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பலி!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அயன்பொம்மையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 38 வயதான கோவிந்தராஜ். இவருக்குத் திருமணாகி மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவரது மனைவி அப்பகுதியில் உள்ள ஒரு பால் பண்ணையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று கோவிந்தராஜ் மது அருந்திவிட்டு போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அதிக போதையில் இருந்த கோவிந்தராஜ் தனது வீட்டின் மாடியில் நிலைதடுமாறி எதிர்பாராத விதமாகத் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் அதிக அளவில் வெளியேறியது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்க முயன்றும் பலனின்றி கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த கோவிந்தராஜின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மது போதையில் மாடியில் இருந்து விழுந்து குடும்பத்தலைவர் பலியான சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தந்தை இன்றித் தவிக்கும் இரண்டு குழந்தைகளின் நிலை அப்பகுதி மக்களிடையே மிகுந்த மனவேதனையை உண்டாக்கியுள்ளது.