உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்... இந்தியாவை முந்திய பாகிஸ்தான்! 

 

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20-ஆம் தேதி 'சர்வதேச மகிழ்ச்சி தினத்தை' முன்னிட்டு ஐ.நா. சபை இந்த அறிக்கையை வெளியிட்டு வருகிறது. பொருளாதார வளர்ச்சிக்கு அப்பாற்பட்டு மக்களின் மனநிறைவை அடிப்படையாகக் கொண்டு 147 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளில், இந்தியாவை பாகிஸ்தான் முந்தியுள்ளது. 

தொடர்ந்து 9-வது முறையாக பின்லாந்து உலகின் மகிழ்ச்சியான நாடாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.  ஐஸ்லாந்து, டென்மார்க், கோஸ்டாரிகா, சுவீடன், நார்வே, நெதர்லாந்து, இஸ்ரேல், லக்சம்பர்க், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளது.  

தரவரிசையில் 147 நாடுகளில் இந்தியா 116-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 118-வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு 2 இடங்கள் முன்னேறியுள்ளது. இருப்பினும், அண்டை நாடுகளான நேபாளம் (99) மற்றும் பாகிஸ்தான் (104) ஆகியவற்றை விட இந்தியா பின்தங்கியே உள்ளது.

அண்டை நாடுகளின் தரவரிசையில் நேபாளம் - 99, பாகிஸ்தான் - 104, இந்தியா - 116, வங்காளதேசம் - 127, இலங்கை - 134, ஆப்கானிஸ்தான் - 147 ஆகியவை இடம்பிடித்துள்ளன. 

ஆய்வறிக்கையின்படி இந்தியாவில் மகிழ்ச்சி குறியீடு குறைவாக இருக்க, அவசரக் காலங்களில் உதவிக்கு ஆட்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை மக்களிடையே குறைவாக உள்ளதும், ஜிடிபி உயர்ந்தாலும், வருமானம் ஒரு சிலரிடம் மட்டுமே குவிந்து கிடப்பதும், தரமான மருத்துவம் அனைவருக்கும் சமமாகக் கிடைக்காத சூழல் நிலவுவதும், இளைஞர்களிடையே நிலவும் எதிர்காலம் குறித்த கவலை மற்றும் வேலைவாய்ப்பின்மையும் காரணங்களாக அடுக்கப்படுகின்றன:.