5 ஆண்டுகளாக தண்ணீருக்குள்ளேயே வசிக்கும் விசித்திர சிறுவன்... வைரலாகும் வீடியோ!
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் பெல்டங்கா பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் இக்பால் ஷேக், மர்மமான உடல்நலப் பாதிப்பு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக இரவும் பகலும் குளத்திலேயே வாழ்ந்து வருகிறான். அந்த சிறுவனுக்கு தண்ணீரை விட்டு வெளியே வந்தால் உடல் முழுவதும் தாங்க முடியாத அளவுக்கு எரிச்சலும் வலியும் ஏற்படுகின்றன. இதனால், அந்த சிறுவன் பெரும்பாலான நேரத்தைக் குளத்து நீரிலேயே கழித்து வருவதுடன், சில சமயங்களில் தொடர்ந்து 4 முதல் 7 நாட்கள் வரை குளத்தை விட்டு வெளியே வராமல் நீரிலேயே மூழ்கியிருக்கிறான்.
இந்த விசித்திர நிலை காரணமாக சிறுவனால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை என்பதால் அவனது கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. குளக்கரையில் நின்றபடி கிராம மக்கள் வழங்கும் அவல், பிஸ்கட் போன்ற தின்பண்டங்களைச் சாப்பிட்டே அவன் உயிர் பிழைத்து வருகிறான். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அவனது பெற்றோரால், பெரிய மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளிக்க முடியவில்லை.
தன்னை ஒரு மர்ம ஆவி பிடித்துள்ளதாக சிறுவன் நம்பினாலும், இது அரிய நரம்பியல் கோளாறாகவோ அல்லது தீவிர தோல் நோயாகவோ இருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து தண்ணீரிலேயே இருப்பதால் சிறுவனின் கை, கால் தோல்கள் வெளுத்து, உரிந்து வருவதுடன் தொடர் சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளும் அவனுக்கு ஏற்பட்டுள்ளன.