உள்ளாட்சித் தேர்தல் வியூகம்:.. புதிய கூட்டணி, தேர்தல் களம் குறித்து முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனை!
சென்னை கோவளத்தில் நடைபெற்ற தவெக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து மிக முக்கியமான அரசியல் நகர்வுகள் வெளிவந்துள்ளன. இக்கூட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தவெக அமைச்சர் நிர்மல் குமார், புதிய கூட்டணி மற்றும் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகத் தலைவர்கள் விவாதித்த விபரங்களைப் பகிர்ந்து கொண்டார்.
2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆளும் கூட்டணி எதிர்கொள்ளவிருக்கும் முதல் தேர்தல் களம் இது என்பதால், இக்கூட்டத்தில் தேர்தல் வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் விரைவில் நடைபெறவிருக்கும் 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களை இந்த புதிய ஆளும் கூட்டணி எப்படி ஒருங்கிணைந்து எதிர்கொள்வது என்பது குறித்து முதலமைச்சர் விஜய் முன்னிலையில் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன.
திமுக கூட்டணி முழுமையாக உடைந்ததைத் தொடர்ந்து, அக்கூட்டணியில் இருந்து வெளியேறி தவெக-வுக்கு ஆதரவளித்து வரும் காங்கிரஸ், விசிக, மதிமுக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் உரியப் பிரதிநிதித்துவம் மற்றும் இடப் பங்கீடுகளை சுமுகமாக வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
புதிய கூட்டணியின் பெயர் மற்றும் அதன் பலம் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் தெரிவிக்கையில், தவெக தலைமையில் உருவாகியுள்ள இந்த புதிய முற்போக்கு ஆளும் கூட்டணிக்கு, அதன் கொள்கைகளைத் பிரதிபலிக்கும் வகையில் ஒரு 'நல்ல பெயர்' சூட்டப்பட உள்ளது. இது குறித்த இறுதி முடிவை முதலமைச்சர் விஜய் விரைவில் அறிவிப்பார்.
கொள்கை முரண்பாடுகள் இன்றி, தமிழக மக்களின் நலனை மட்டுமே பிரதானமாகக் கொண்டு இக்கூட்டணி முறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆளும் தவெக கூட்டணி தனது அடுத்தகட்ட தேர்தல் பணிகளுக்கான அடித்தளத்தைக் கோவளம் கூட்டத்தின் மூலம் பலமாக அமைத்துள்ளது. திராவிடக் கட்சிகளின் பலவீனம் மற்றும் உட்கட்சிப் பூசல்களைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு, உள்ளாட்சித் தேர்தலிலும் முழுமையான வெற்றியைப் பதிவு செய்ய இக்கூட்டணி திட்டமிட்டுள்ளது.