லாக்-அப் டெத், பட்ஜெட், குதிரை பேரம்.. முதல்வர் விஜய் தலைமையில் இன்று சட்டபேரவை கூடுகிறது!
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சலசலப்புகள் மற்றும் முக்கிய நிர்வாக முடிவுகளுக்கு இடையே, முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் கூடுகிறது.
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் இந்த 2-வது அமைச்சரவைக் கூட்டம் பல்வேறு முக்கிய விவகாரங்கள் மற்றும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில், 2026-27 ஆம் நிதியாண்டுக்கான புதிய அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய மக்கள் நலத்திட்டங்கள், நிதி ஒதுக்கீடு மற்றும் புதிய தொழிற்கொள்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.
மேலும், சட்டமன்றத் தேர்தலின் போது மக்களுக்கு அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றுவது, புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்தும் விவாதித்து அமைச்சரவை ஒப்புதல் அளிக்க உள்ளது.
அண்மைக்காலமாகத் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள 'குதிரை பேரம்' புகார்கள் மற்றும் அண்மையில் நிகழ்ந்த சிறை உயிரிழப்பு விவகாரம் குறித்தும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
சட்டம்-ஒழுங்கு நிலவரத்தை எவ்வித சமரசமும் இன்றிப் பராமரிப்பது மற்றும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை எதிர்கொள்வதற்கான அரசின் அடுத்தகட்ட மூலோபாய உத்திகள் குறித்தும் முதலமைச்சர் விஜய் அமைச்சர்களுடன் தீவிரமாக ஆலோசிக்க உள்ளார். இக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.