மீண்டும், மீண்டுமா... போலீஸ் விசாரணையில் இளைஞர் பலி? ... கதறும் குடும்பத்தினர்... உறவினர்கள் சாலை மறியல்!

 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வசித்து வருபவர் 37 வயது   ஜெயக்குமார். இவருடன்   ஆதனூரை சேர்ந்த  34 வயது  அழகர்சாமியையும் மார்ச்  5ம் தேதி இரவு இருவரையும், அரிவாளால் வெட்டி விட்டு மர்ம நபர்கள் தப்பியோடி விட்டனர். இச்சம்பவம் குறித்து  வழக்குப்பதிவு செய்து  போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த தேடுதலில்  கிருஷ்ணராஜபுரம் காலனி 26 வயது  ஆகாஷ் டெலிசன் , 23 வயது   குணா இருவரையும்  விரட்டிப்பிடித்து கைது செய்தனர். இந்தத் தேடுதல் வேட்டையில் ஆகாஷ்  போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றார். அப்போது அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டதால் உடனடியாக   மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  இந்நிலையில் மார்ச் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை  நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டு இருந்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஆகாஷ் உறவினர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.   ஆகாஷ் டெலிசன் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறிவிட்டனர்.  ஆகாஷின் தாயார் ஆனந்தி உயிரிழப்பு குறித்து கூறுகையில், ‘‘உன் புள்ள கையில கிடைச்சா கொன்னுருவோம்னு போலீசார் சொன்னாங்க. இப்ப கொன்னுட்டாங்க’’ என பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.  அதே நேரத்தில் அவரது தந்தை ராஜேஷ்கண்ணனும்  ‘‘எனது மகனை ஒரு வழக்கில் கைது செய்ய வேண்டும் என கூறி என்னையும், என் மனைவியையும் காவல் நிலையத்திலேயே பிடித்து வைத்துக் கொண்டனர்.   

 

எனது மகன் கிடைத்ததும்  எங்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.  அதன் பிறகு தான் எனது மகனுக்கு கால் முறிவு ஏற்பட்டு மானாமதுரையில் சிகிச்சையில் இருப்பதாக தெரிவித்தனர். மகனை பார்க்க சென்ற எனது மனைவியிடம்  விசாரணையின் போது காவல்துறையினர் அடித்ததாக ஆகாஷ் கூறியிருக்கிறார். திடீரென காவல்துறையினர் போன் செய்து மகன் உயிரிழந்து விட்டதாக கூறுகின்றனர்.  முன்னுக்கு பின் முரணான பதில்கள் பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளன.   காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று காலில் கற்களை வைத்து அடித்து காலை உடைத்து சாதிய ரீதியாக பேசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது . இது குறித்து விரிவான விளக்கம் அளிக்கும் வரை எங்களது மகனின் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறினார்.