லாக்கப் மரணம்.. அருணாச்சலம் மயங்கி விழும் வீடியோவை வெளியிட்டது காவல் துறை!
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இளைஞர் அருணாச்சலத்தின் வழக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல் நிலையத்தின் சிசிடிவி காட்சிகளைப் போலீசார் வெளியிட்டுள்ளனர்.
அருணாச்சலம் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டதால் இறக்கவில்லை என்றும், அவர் முன்னரே உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்ததாகக் கூறி வந்த தூத்துக்குடி தென்பாகம் காவல் துறையினர், தற்போது அதற்கு ஆதாரமாகச் சில வீடியோ பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.
காவல் நிலைய வளாகத்திற்குள் ஜூலை 17-ம் தேதி இரவு 8.38 மணியளவில் இளைஞர் அருணாச்சலம் திடீரென மயங்கி விழுவது போன்ற 8 விநாடி சிசிடிவி காட்சி பதிவாகியுள்ளது. காவல் நிலையத்தில் அருணாச்சலம் மயங்கி விழுந்ததைத் தொடர்ந்தே, அவரை மேலதிக விசாரணை செய்யாமல் அவரது தாயாருடன் பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்ததாகப் போலீசார் மீண்டும் விளக்கம் அளித்துள்ளனர்.
காவல் துறை தரப்பில் இந்த சிசிடிவி காட்சிகள் ஆதாரமாக வெளியிடப்பட்டிருந்தாலும், இச்சம்பவம் குறித்த சர்ச்சைகள் இன்னும் தணியவில்லை. உயிரிழப்பதற்கு முன் அருணாச்சலம் பேசிய வீடியோவில், காவல்துறையினர் தன்னை மிகக் கொடூரமாகத் தாக்கியதாக நேரடியாகக் குற்றம் சாட்டியிருந்தார். இதனால் இந்த 8 விநாடி சிசிடிவி காட்சி மட்டுமே உண்மையை முழுமையாக நிரூபித்துவிடாது எனப் பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் சிபிஐ விசாரணை மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கைகளைக் கோரி வரும் நிலையில், வெளியிடப்பட்ட சிசிடிவி காட்சிகளின் உண்மைத்தன்மை குறித்தும் தீவிர விவாதங்கள் எழுந்துள்ளன.