லண்டன் கார் பந்தயம்: அஜித் அணி 3-வது இடத்தைப் பிடித்து சாதனை!
லண்டனில் நடைபெற்ற லீ மேன்ஸ் கப் சர்வதேச கார் பந்தயத்தில், நடிகர் அஜித் குமாரின் அணி கடுமையான போட்டிகளுக்கு இடையே 3-வது இடத்தைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
தமிழக முதலமைச்சர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகப் பிரிட்டன் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அஜித்தின் அழைப்பை ஏற்றுச் சென்று லீ மேன்ஸ் கப் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை நேரில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். போட்டிக்கு முன்பு அஜித் நின்றுகொண்டிருந்த கார் அருகில் ஓடிச் சென்று அவரிடம் அன்பைப் பகிர்ந்து வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இப்போட்டியில் மொத்தம் 44 கார்கள் பங்கேற்றன. போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே நடிகர் அஜித் ஓட்டிச் சென்ற கார் டிராக்கில் இருந்து விலகிப் பக்கவாட்டில் சென்று விபத்துக்குள்ளானது. எனினும், உடனடியாக மீட்புக் குழுவினர் களமிறங்கி காரைச் சீரமைத்தனர். விபத்தின் காரணமாகத் தொடக்கத்தில் 16-வது இடத்திற்குத் தள்ளப்பட்ட அஜித் அணி, அதன்பிறகு படிப்படியாகத் திறம்பட முன்னேறி மூன்றாம் இடத்தைக் கைப்பற்றி வியக்க வைத்தது.
இந்திய நேரப்படி நேற்று இரவு 9.30 மணிக்குத் தொடங்கி 11.47 மணிக்கு நிறைவடைந்த 5.1 கி.மீ தூரக் கொண்ட (50 லேப்கள்) இந்தப் போட்டியில், ஏ.என்.எஸ். மோட்டார்ஸ்போர்ட் அணி முதலிடத்தையும், ஆர். ஏஸ்.ஜி.பி அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. டீம் விராஜ் சார்பில் களம் இறங்கிய நடிகர் அஜித்தின் அணி 3-வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.