லண்டன் சுற்றுப்பயணம் நிறைவு.. ரூ.15,300 கோடி முதலீடு - இன்று காலை சென்னை வருகிறார் முதலமைச்சர் விஜய்!
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்ற தமிழக முதலமைச்சர் விஜய் தனது அரசு முறைப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு இன்று காலை சென்னை திரும்புகிறார்.
தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த 10-ஆம் தேதி இரவு முதலமைச்சர் விஜய் லண்டன் புறப்பட்டுச் சென்றார். 6 நாள் பயணமாக லண்டன் சென்ற அவருக்கு அங்கு வசிக்கும் தமிழர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
கடந்த 12-ம் தேதி புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயத் திடலுக்குச் சென்ற முதலமைச்சர் விஜய், அங்குள்ள உள்கட்டமைப்பு, பந்தயச் சுற்றுப்பாதை, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வணிக ரீதியான நடத்தும் முறைகளை நேரில் பார்வையிட்டார். மேலும், அங்கு நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
லண்டனில் பல்வேறு தொழில் அதிபர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதில், தமிழகத்திற்கு ரூ.15 ஆயிரம் கோடிக்கும் அதிகமான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் 10,000க்கும் மேற்பட்டோருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தனது லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவு விமானம் மூலம் புறப்பட்ட முதலமைச்சர் விஜய், இன்று காலை 8 மணிக்குச் சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அவரை வரவேற்க தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) விமான நிலையத்தில் உற்சாக வரவேற்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.