தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் புறப்படுகிறார் முதல்வர் விஜய்; புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு!
தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் கடந்த மே 10ஆம் தேதி பொறுப்பேற்றார். மாநிலத்தில் தொழில்கள் அண்டை மாநிலங்களுக்குச் செல்வதாகவும் முதலீடுகள் குறைந்துள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அண்மையில் சென்னையில் முதலீட்டாளர்கள் சந்திப்பு நடத்தப்பட்ட நிலையில், ஒரு லட்சம் ரூபாயில் தொடங்கப்பட்ட நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்வதாக ஒப்பந்தம் உருவான செய்தி வெளியாகிப் பேசப்பட்டது.
இந்தச் சூழலில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் வருகிற 10ஆம் தேதி லண்டன் பயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கே முன்னணித் தொழிலதிபர்களுடன் கலந்தாலோசனை நடத்தி புதிய தொழில் ஒப்பந்தங்களை மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார். இந்த வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு அவர் 16ஆம் தேதி தாயகம் திரும்புவார் எனத் தெரிகிறது.
முதலமைச்சரின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த விவாகரத்து மனுவை அண்மையில் திரும்பப் பெற்றார். அவர் தற்போது லண்டனில் வசித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், இந்த அரசுப் பயணத்தின் போது குடும்ப விவகாரங்கள் தொடர்பாகவும் பேசப்படலாம் என்ற தகவல்கள் உலவுகின்றன. இருப்பினும் இந்தப் பயணத்தின் தனிப்பட்ட அம்சங்கள் குறித்து அரசு அதிகாரிகள் எந்தத் தகவலையும் உறுதிப்படுத்தவில்லை.