பிரம்மதேவர் பூஜித்த காடந்தேத்தி ஸ்ரீஆதிநாத ஐயனார்... பாவங்களைப் போக்கும் திருத்தலம்!
புண்ணியசுகங்களின் இருப்பிடமாகவும், வானளாவிய மாளிகைகளை உடையதாகவும் திகழும் தேஜோவதியில் வீற்றிருக்கும் பகவான் ஸ்ரீ மகா சாஸ்தாவை தரிசனம் செய்வதற்காக ஒருநாள் பிரம்மதேவர், இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் சென்றனர். அங்கே திவ்யமான ஆசனத்தில் ஸ்ரீபூர்ணாம்பிகை மற்றும் ஸ்ரீபுஷ்களாம்பிகை சமேதராய், நித்யகல்யாண சுந்தரமூர்த்தியாய் அமர்ந்திருந்த பகவானை அனைவரும் வணங்கி, சர்வலோக நாயகரே எனப் பலவாறு போற்றித் துதித்தனர். தேவர்களின் தூய்மையான பக்தியைக் கண்டு மகிழ்ந்த மகா சாஸ்தா, அவர்களுக்குத் தனது மேலான ஆசிகளை வழங்கி அருள்பாலித்தார்.
இவ்வாறு இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும் பகவானை மனமுருகி வழிபட்டுக் கொண்டிருந்த வேளையில், பிரம்மதேவர் மட்டும் தனது விதிவசத்தால் மமதை கொண்டு பகவானை நமஸ்கரிக்காமல் நின்றார். உலகைச் சிருஷ்டிக்கும் தான் ஏன் ஹரிக்கும் ஹரனுக்கும் பிறந்த ஒரு சிறு பாலகனை வணங்க வேண்டும் என்ற அகங்காரத்துடன் அவர் வழிபடாமல் சன்னதியை விட்டு வெளியேறினார். மகா சாஸ்தாவை அவமதித்த இந்த மாபெரும் பாவத்தின் காரணமாக, பிரம்மதேவர் தான் கற்றிருந்த சதுர்வேதங்களையும் மறந்ததுடன், தனது படைப்புத் தொழிலுக்கான ஆற்றலையும் முழுமையாக இழந்து தவித்தார்.
இதனால் மிகுந்த துன்பமுற்ற பிரம்மதேவர், செய்வதறியாது கைலாசம் நோக்கி ஓடிச் சென்று சிவபெருமானை நமஸ்கரித்துத் தனக்கு ஏற்பட்ட துயரத்தைத் தீர்க்குமாறு வேண்டினார். அவரது நிலைமையைக் கேட்ட சிவபெருமான், சர்வேஸ்வரனாகிய மகா சாஸ்தாவுக்கும் தனக்கும் எந்த பேதமும் இல்லை என்றும், மமதையின் காரணமாகப் பரம்பொருளை வணங்கத் தவறியதாலேயே இந்த நிலை ஏற்பட்டது என்றும் எடுத்துரைத்தார். தனது அறியாமை நீங்கி ஞானம் பெற்ற பிரம்மதேவர், பாவம் தீர வழி கேட்க, பூலோகத்தில் உள்ள ஜாப்யேஸ்வரம் எனப்படும் காடந்தேத்தி திருத்தலத்திற்குச் சென்று அங்கிருக்கும் சுயம்புமூர்த்தியான ஸ்ரீஆதிநாத ஐயனாரை ஆராதிக்குமாறு சிவபெருமான் வழிகாட்டினார்.
சிவபெருமானின் அறிவுரைப்படி காடந்தேத்தி திருத்தலத்தை அடைந்த பிரம்மதேவர், அங்கு வழிபாட்டிற்காக ஆலயத்தின் தென்கிழக்கு பகுதியில் ஒரு புனித தீர்த்தத்தை உருவாக்கினார். நாற்பத்தெட்டு நாட்கள் தொடர்ந்து நாளொன்றுக்கு நாற்பத்தெட்டு முறை ஆலயத்தைப் பிரதட்சிணம் செய்து, முறைப்படி ஆராதித்து வந்த பிரம்மதேவருக்கு மகா சாஸ்தா நேரடியாகக் காட்சி தந்து அருளினார். அவரது தூய்மையான பக்தியால் மகிழ்ந்த சாஸ்தா, பிரம்மனின் பாவங்களை முழுமையாக நீக்கி, அவர் இழந்த சதுர்வேத அறிவையும் படைப்புத் திறனையும் மீண்டும் பெறச் செய்து ஆசீர்வதித்தார்.
மேலும், இந்தத் தீர்த்தத்தில் நீராடித் தன்னைத் தரிசித்து, நாற்பத்தெட்டு நாட்கள் தொடர்ந்து நாற்பத்தெட்டு பிரதட்சிணங்கள் செய்து வழிபடுபவர்களின் அத்தனைப் பெரும் பாவங்களும் நீங்கி, அவர்கள் நினைத்த காரியங்கள் யாவும் கைக்கூடும் என்று சாஸ்தா வரமளித்தார். பிரம்மதேவர் பூஜித்ததன் நினைவாக இந்தத் தலம் 'பிரம்மபுரம்' என்றும், அவரால் உருவாக்கப்பட்ட தீர்த்தம் 'பிரம்ம தீர்த்தம்' என்றும் அழைக்கப்படுகிறது. நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே அமைந்துள்ள இந்தக் காடந்தேத்தி ஆதிநாத ஐயனார் கோவிலில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால், ஏழரைச் சனி மற்றும் அஷ்டமச் சனியால் ஏற்படும் தோஷங்களும், துஷ்ட சக்திகளால் உண்டாகும் இன்னல்களும் நீங்கும் என்பது பக்தர்களின் பலத்த நம்பிக்கையாக உள்ளது.