சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் 3 தேங்காய்கள் வைத்து சிறப்பு வழிபாடு!
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள புகழ்பெற்ற சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில் புதியதாக 3 தேங்காய்கள் வைத்து வழிபாடுகள் தொடங்கப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் மாதம் 10-ஆம் தேதி முதல் உத்தரவு பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், அருகம்புல், எலுமிச்சைப்பழம், வெற்றிலை பாக்கு ஆகியவை வைக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அவை மாற்றப்பட்டன.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பகுதியைச் சேர்ந்த இரும்புக்கடை வியாபாரி சேர்மராஜா (50) என்பவரின் கனவில் முருகப்பெருமான் தோன்றி, ஆண்டவன் உத்தரவு பெட்டியில் 3 தேங்காய்களை வைத்து வழிபட வேண்டும் என்று கூறியதாக அவர் கோவில் நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து, கோவிலில் உள்ள முருகப்பெருமான் முன்பு பூ போட்டு உத்தரவு கேட்கப்பட்டது. அதில் உத்தரவு கிடைத்ததை அடுத்து, பெட்டியில் இருந்த பழைய பொருட்கள் மாற்றப்பட்டு தற்போது 3 தேங்காய்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பெட்டியில் வைக்கப்படும் பொருட்கள் மூலம் எதிர்காலத்தில் சமூகத்தில் நடக்கவிருக்கும் நல்ல அல்லது தீய மாற்றங்கள் முன்கூட்டியே உணர்த்தப்படும் என்பது பக்தர்களின் பலத்த நம்பிக்கையாக உள்ளது.