மின்சாரக் கம்பியில் உரசி லாரி தீப்பற்றி எரிந்து நாசம்- புதுக்கோட்டையில் பரபரப்பு!
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் உரசி வைக்கோல் லாரி ஒன்று தீப்பிடித்து முழுமையாக எரிந்து சாம்பலான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் உள்ள கருப்பூர் கிராமத்தின் வழியாக வைக்கோல் சுமை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
அதிகளவு வைக்கோல் ஏற்றப்பட்டிருந்ததால், சாலையில் இருந்த மின்சாரக் கம்பியில் லாரியின் மேல் பகுதி உரசியது. இதில் உருவான மின்பொறி பட்டு வைக்கோலில் தீப்பற்றி, நொடிப் பொழுதில் லாரி முழுவதும் மளமளவெனத் பரவியது.
லாரியில் தீப்பற்றியதை உணர்ந்த ஓட்டுநர் மற்றும் ஊழியர்கள் உடனடியாக லாரியை நிறுத்திவிட்டு வெளியே குதித்துத் தப்பியதால், அதிர்ஷ்டவசமாகப் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவுடையார்கோவில் காவல் துறையினர் மற்றும் தீயணைப்புப் படையினர், சுமார் 1 மணி நேரம் கடுமையாகப் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இருப்பினும், இந்த விபத்தில் லாரி மற்றும் அதில் இருந்த வைக்கோல் சுமை முழுவதும் முற்றிலுமாகச் சேதமடைந்தது. இச்சம்பவம் தொடர்பாக ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.