தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த லாரி.. சிதறிய ஆப்பிள்களை போட்டிப்போட்டு அள்ளிச் சென்ற பொதுமக்கள்!
தெலுங்கானா மாநிலத்தில் ஆப்பிள் பழங்களை ஏற்றி வந்த லாரி ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், சாலையில் சிதறிய ஆப்பிள்களைப் பொதுமக்கள் போட்டிப்போட்டு அள்ளிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டம் மடேடு கிராமத்திற்கு அருகே, வாரங்கல் - கம்மம் தேசிய நெடுஞ்சாலையில் ஆப்பிள் பழங்களைச் சுமந்து கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் ஏற்றப்பட்டிருந்த பெட்டிகள் உடைந்து, ஆப்பிள்கள் அனைத்தும் சாலையில் நாலாபுறமும் சிதறின.
விபத்து குறித்த தகவல் பரவியதும், அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்களும் சம்பவ இடத்தில் திரண்டனர். காயமடைந்த லாரி ஓட்டுநருக்கு உதவ யோசிக்காத சிலர், பிளாஸ்டிக் பைகள், கூடை மற்றும் பெட்டிகளுடன் வந்து சாலையில் சிதறிக் கிடந்த ஆப்பிள்களைப் போட்டிப்போட்டு அள்ளிச் சென்றனர். வெறும் 15 நிமிடங்களுக்குள் சாலையில் கிடந்த அத்தனை ஆப்பிள்களையும் மக்கள் அள்ளிச் சென்றுவிட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
பொதுமக்கள் ஆப்பிள்களை அள்ள திரண்டதாலும், லாரி கவிழ்ந்து கிடந்ததாலும் வாரங்கல் - கம்மம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த காவல்துறையினர், உடனடியாகக் கூட்டத்தைக் கலைத்து போக்குவரத்தைச் சீர்செய்தனர். பின்னர் மீட்பு வாகனங்கள் மூலம் கவிழ்ந்த லாரி அகற்றப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.