லாரி டயர் வெடித்து இளைஞர் பரிதாபப் பலி... காற்று அடித்த போது சோகம்!
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் காற்று நிரப்பியபோது லாரி டயர் வெடித்த விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சென்னை சோழிங்கநல்லூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த 38 வயதான சரவணகுமார் தனது நண்பருடன் கோவிலுக்குச் சென்றுள்ளார். அப்போது நாவலூரில் உள்ள கடைக்குத் தனது இருசக்கர வாகனத்தின் டயருக்குக் காற்று பிடிப்பதற்காக அவர் சென்றுள்ளார். அங்கு ஊழியர்கள் லாரி டயர் ஒன்றுக்குப் பஞ்சர் ஒட்டி காற்று பிடித்துக் கொண்டிருந்ததை அவர் அருகில் நின்று பார்த்துள்ளார்.
அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாகக் காற்று நிரப்பப்பட்ட லாரி டயர் திடீரெனப் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. வெடித்த அதிர்வில் காற்றில் பறந்து வந்த லாரி டயர் அருகில் நின்று கொண்டிருந்த சரவணகுமார் மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டுப் பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சரவணகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்த தாழம்பூர் காவல் துறையினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்குச் சென்ற வழியில் எதிர்பாராத விதமாக நடந்த இந்த விபத்து அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சர் கடைகளில் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றிச் செயல்படுவது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. டயர் வெடித்து வாலிபர் பலியான இந்தச் சம்பவம் திருப்போரூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் உண்டாக்கியுள்ளது.