திருமணத்திற்கு மறுத்ததால் கொடூரம்... காதலியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த காதலன்!
கர்நாடக மாநிலம் பெங்களூரு பெல்லந்தூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கும் வகையிலான கொடூரக் கொலைச் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்குள்ள ஒரு குடியிருப்பில் டார்ஜிலிங் பகுதியைச் சேர்ந்த பூர்வா லேஷ்பா (24) என்பவரும், சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த கங்கியா சூபா (22) என்ற இளம்பெண்ணும் கடந்த ஒரு மாதமாகத் திருமணம் செய்யாமலேயே ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த ஓராண்டுக்கு முன்பு சிக்கிமில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்தபோது காதலிக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் பெங்களூருவில் பூர்வா லேஷ்பா ஒரு ஓட்டலிலும், கங்கியா சூபா பெண்களுக்கான சலூன் கடையிலும் வேலை பார்த்து வந்துள்ளனர். சம்பவத்தன்று நள்ளிரவில் ஒரு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு அதிகாலையில் கங்கியா சூபா வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அப்போது அவர் வேறு ஒரு வாலிபருடன் பழகி வந்தது குறித்து பூர்வா லேஷ்பாவுக்குத் தெரியவந்ததால், இருவருக்கும் இடையே வீட்டில் பயங்கரமான வாய்த்தகராறும் அனல் பறக்கும் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தன்னை உடனடியாகத் திருமணம் செய்து கொள்ளும்படி கங்கியா சூபாவை பூர்வா லேஷ்பா கட்டாயப்படுத்தியபோது, திருமணம் வேண்டாம் என அந்த இளம்பெண் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பூர்வா லேஷ்பா சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து தனது காதலியின் கழுத்தை மிகக் கொடூரமாக அறுத்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதுகுறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒயிட்பீல்டு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி, தலைமறைவாக இருந்த காதலன் பூர்வா லேஷ்பாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.