புகைப்படங்களை வெளியிடுவேன்... காதலன் மிரட்டியதால் இளம்பெண் கடிதம் எழுதி தற்கொலை!
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா பெலாமக்கி கிராமத்தைச் சேர்ந்தவர் வாணிஸ்ரீ (வயது 22). இவர் சிவமொக்காவில் உள்ள கல்லூரியில் தனது படிப்பை முடித்த பின், பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார். அப்போது கல்லூரியில் இவருடன் நண்பராகப் பழகிய அபிஷேக் என்பவர், வாணிஸ்ரீயை காதலிப்பதாகக் கூறித் தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
ஆனால் வாணிஸ்ரீ அவரது காதலை ஏற்றுக்கொள்ள மறுத்ததால், ஆத்திரமடைந்த அபிஷேக் தன்னிடம் இருந்த வாணிஸ்ரீயின் தனிப்பட்ட புகைப்படங்களை அவருக்கு அனுப்பி மிரட்டியுள்ளார். தான் அழைக்கும் போதெல்லாம் உல்லாசத்திற்கு வர வேண்டும் என்றும், வர மறுத்தால் அந்தப் புகைப்படங்களைச் சமூக வலைதளத்தில் வெளியிட்டு நற்பெயரைக் கெடுத்துவிடுவேன் என்றும் அவர் துன்புறுத்தியுள்ளார். இதனால் கடும் மனவேதனை அடைந்த வாணிஸ்ரீ கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு ஏரியில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் வாணிஸ்ரீயின் உடலை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், வாணிஸ்ரீ தங்கியிருந்த அறையில் சிக்கிய கடிதத்தைக் கைப்பற்றினர்; அதில் அபிஷேக்கிற்குைக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.