திருமணம் நிச்சயமான நிலையில் காதலர்கள் தற்கொலை... கேரளத்தில் அதிர்ச்சி!
இரண்டு பேருமே பிரபல வங்கிகளில் பணிபுரிந்து வந்தனர். இருவீட்டார் பார்த்து சம்மதித்து, திருமணத்திற்கு நிச்சயித்த நிலையில், வரும் டிசம்பரில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது.
திருமணத்திற்கிடையே அடிக்கடிப் பார்த்துப் பேசி, சிரித்து பழகி ஒன்றாக ஊர் சுற்றி காதலித்து வந்த நிலையில், இருவரும் வெவ்வேறு இடங்களில் ஒரே நாளில் அடுத்தடுத்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் கேரளத்தை அதிர செய்திருக்கிறது.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் பள்ளிக்கரை கட்டம்பள்ளியைச் சேர்ந்த சந்திரன்-ரீனா தம்பதியரின் மகள் அனுஸ்ரீ வங்கி ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும் கண்ணூர் மாவட்டம் அம்பலத்தட்டு பகுதியைச் சேர்ந்த சுதாகரன்-அனிதா தம்பதியரின் மகன் அமல் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளத்தில் உள்ள வங்கியில் எழுத்தராக பணிபுரிந்து வந்த இவர்களது திருமணம் டிசம்பர் மாதம் இருபத்தி ஆறாம் தேதி நடைபெற இருந்தது.
திருமணத் தேதி நெருங்கி வந்த நிலையில் இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசி வந்துள்ளதுடன் வார இறுதி நாட்களில் வீடுகளுக்குச் சென்றுவிட்டு திரும்பியுள்ளனர். இந்த சூழலில் ஹன்சூரில் தான் தங்கியிருந்த வீட்டில் அனுஸ்ரீ மர்மமான முறையில் பிணமாகக் கிடப்பதாக அவரது பெற்றோருக்கு அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. காவல்துறை விசாரணையில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சோகத்திலிருந்து மீள்வதற்குள் எர்ணாகுளம் வடக்கு ரயில் நிலையம் அருகே உள்ள ஓட்டல் அறையில் அமல் பிணமாகக் கிடப்பதாக அடுத்தடுத்து தகவல் வந்துள்ளது. அவரும் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் உள்ள உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் திடீர் விபரீத முடிவுக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.