காற்றழுத்த தாழ்வு பாதை... இந்த மாவட்டங்களில் எல்லாம் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டலக் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
டெல்டா மற்றும் வட மாவட்டங்களான செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும்.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நகரில் அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே, எதிர்வரும் நாட்களுக்கு மீனவர்கள் மேற்குறிப்பிட்ட கடற்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.