தமிழகத்திலேயே குறைவு... அம்பாசமுத்திரம் தொகுதியில் 5 பேர் மட்டுமே போட்டி - நட்சத்திர வேட்பாளர்களிடையே பலப்பரீட்சை!
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், நெல்லை மாவட்டத்தின் அம்பாசமுத்திரம் தொகுதி தேர்தல் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. தமிழகத்தின் 234 தொகுதிகளிலேயே மிகக் குறைவாக, இங்கு வெறும் 5 வேட்பாளர்கள் மட்டுமே இறுதிப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
அம்பாசமுத்திரம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர்கள் எவருமே இல்லாத நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மட்டுமே நேரடியாக மோதுகின்றனர்: காங்கிரஸ் (இந்தியா கூட்டணி): வி.பி.துரை, அதிமுக: இசக்கி சுப்பையா, தமிழக வெற்றிக் கழகம்: ராஜகோபால், நாம் தமிழர் கட்சி: நத்தம் சிவசங்கரன், பகுஜன் சமாஜ் கட்சி: இசை கண்ணன்
பொதுவாக ஒரு தொகுதியில் 15 முதல் 30 வேட்பாளர்கள் வரை போட்டியிடுவது வழக்கம். சில தொகுதிகளில் 50-க்கும் மேற்பட்டோர் போட்டியிடுவதால் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். ஆனால், அம்பாசமுத்திரத்தில் வெறும் 5 பேர் மட்டுமே போட்டியிடுவதால், ஒரே ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் மட்டுமே போதுமானது. இது தேர்தல் பணியாளர்களுக்கும், சின்னங்களைத் தேடி வாக்களிக்கும் மக்களுக்கும் மிகுந்த வசதியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
இந்தத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா (அதிமுக) மற்றும் இந்தியா கூட்டணி சார்பில் களம் காணும் வி.பி.துரை இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவையும் கணிசமான வாக்குகளைப் பிரிக்கும் என்பதால், இந்த 5 முனைப் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.