LPG டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் - சிலிண்டர் விநியோகம் முடங்கும் அபாயம்.. ரூ.50 கோடி வாடகை பாக்கி!
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) நிறுவனம் தங்களுக்கு வழங்க வேண்டிய சுமார் ரூ.50 கோடி வாடகை பாக்கியை உடனடியாக வழங்கக் கோரி, தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்குத் தயாராகி வருகிறது.
நாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இச்சங்கத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளதாவது: கடந்த பல மாதங்களாக ஐஓசி நிறுவனம் லாரிகளுக்கான வாடகைத் தொகையை வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. தற்போது நிலுவைத் தொகை மட்டும் ரூ.50 கோடியைத் தாண்டியுள்ளது.
சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றம் மற்றும் எரிபொருள் விலை உயர்வால் லாரி உரிமையாளர்கள் ஏற்கனவே பெரும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றனர். இந்தச் சூழலில் வாடகை பாக்கியும் வராததால், வாகனக் கடன் தவணை மற்றும் ஓட்டுநர்களின் ஊதியத்தை வழங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்தப் பிரச்சினை குறித்து இறுதி முடிவு எடுக்க, நாளை (ஏப்ரல் 16) நாமக்கல்லில் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், எப்போது முதல் வேலைநிறுத்தத்தைத் தொடங்குவது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்படவுள்ளது.
தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் சர்வதேச அளவில் எரிவாயு விநியோகத்தில் ஏற்கனவே சில தடங்கல்கள் உள்ளன. இந்தச் சூழலில், தென் மாநிலங்களுக்குத் தேவையான சமையல் எரிவாயுவைக் கொண்டு செல்லும் 5,500-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு மிகக் கடுமையாக உயரும் என அஞ்சப்படுகிறது.