இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உல்லாஸ் கிர்பேகர் பதவியேற்பு!

 

இந்திய ராணுவத்தின் தென்பகுதி புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உல்லாஸ் கிர்பேகர் பொறுப்பேற்றுள்ளார். அவர் தனது பணிகளைச் சென்னையில் உள்ள வெற்றிப் போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தித் தொடங்கினார்.

தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவரான இவர், கடந்த 1989-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சமிக்ஞை பிரிவில் அதிகாரியாகப் பணியில் இணைந்தார். மேலும், கான்பூர் ஐஐடி-யில் கணினி அறிவியலில் தொழில்நுட்ப முதுகலைப் பட்டமும், அமெரிக்காவில் தகவல் போர்முறை பிரிவில் அறிவியல் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

கிழக்கு மண்டலம், லடாக் பிராந்தியம் மற்றும் ராணுவத் தலைமையகம் எனப் பல்வேறு முக்கியப் பொறுப்புகளிலும், படைப்பிரிவுகளிலும் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு நிலப்பரப்புகளில் பணியாற்றிய நீண்ட அனுபவம் கொண்டவர்.

இவரது சிறப்பான பணிக்காக 2023 ஜனவரி 26 அன்று 'சேனா பதக்கம்' மற்றும் 2025 ஜனவரி 26 அன்று 'அதி விசிஷ்ட சேவா பதக்கம்' வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார். மேலும், கடந்த 2024 டிசம்பர் முதல் சிக்னல் படைப்பிரிவின் 72-வது கர்னல் கமாண்டன்டாகவும் செயல்பட்டு வருகிறார்.

தென்பகுதி தளபதியாக இவர், இப்பகுதிக்கான செயல்பாடுகள், நிர்வாகம், தளவாடங்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் நலன் சார்ந்த நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதோடு, சிவில் நிர்வாகத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையேயான ராணுவத்தின் தொடர்பை மேலும் வலுப்படுத்துவார்.