கார் நிறுத்துவதில் தகராறு: லக்னோவில் பட்டப்பகலில் 3 பேர் சுட்டுக்கொலை

 

 

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், கார் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாதத்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நவ்பஸ்தா, பிராமணி டோலா பகுதியில் திங்கள்கிழமை காலை காலி இடத்தில் கார் நிறுத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ரிஷப் சுக்லா (30) என்பவர் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் சிவாஜி திவாரி (62), ஷிவேந்திர திவாரி (55), சுயாஷ் திவாரி (30) ஆகியோர் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ரிஷப் சுக்லாவைக் கைது செய்தனர். அவரிடமிருந்து துப்பாக்கி மற்றும் நான்கு காலி தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு நிலை கட்டுப்பாட்டில் இருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.