இளைஞர் மரண சர்ச்சை...  வீடியோவால்  2 பெண் நடனக் கலைஞர்கள் கைது! 

 

 

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பெண் நடனக் கலைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் தன்னைப் பொய்யான குற்றச்சாட்டுகள் கூறி மனரீதியாகத் துன்புறுத்தியதாக, உயிரிழப்பதற்கு முன்பு அந்த இளைஞர் வெளியிட்ட வீடியோக்களில் குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோவின் தாக்கூர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த தேஷ்ராஜ் (38) என்பவர் தனியார் வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இவரது சகோதரர் சேதிலால் அளித்த புகாரின்படி, சப்னா ராவத், நேஹா பர்வீன் ஆகிய இரு பெண்களும் பணம் மற்றும் நகைகளைத் திருடியதாக தேஷ்ராஜ் மீது குற்றம்சாட்டி, அவருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

உயிரிழப்பதற்கு முன்பு தேஷ்ராஜ் குடும்பத்தினருக்கு அனுப்பிய வீடியோக்களில், இரு பெண்கள் மட்டுமின்றி பாரா காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் மீதும் புகார் தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது. போலீசார் தன்னை மிரட்டியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதையடுத்து, சகோதரரின் புகாரின் அடிப்படையில் தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த தாக்கூர்கஞ்ச் போலீசார், சப்னா மற்றும் நேஹாவைக் கைது செய்துள்ளனர். போலீசார் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் தனியாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.