இன்று சந்திரகிரகணம்... நீல விளிம்புடன் வானில் ரத்தச் சிவப்பாக மாறும் சந்திரன் - வானில் மாயாஜாலம்!
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று விண்ணில் ஒரு அபூர்வ நிகழ்வாக அரங்கேற உள்ளது. நிலவு வழக்கமான வெண்மை நிறத்திலிருந்து மாறி, ரத்தச் சிவப்பாகவும், அதன் ஓரங்களில் ஒரு மெல்லிய நீல நிறக் கோட்டுடனும் காட்சியளிக்கப் போகிறது.
இந்தச் சந்திர கிரகணம் ஒரு 'முழுச் சந்திர கிரகணம்' ஆகும். பூமியின் நிழல் சந்திரனை முழுமையாக மூடும்போது, சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தின் வழியாகச் சிதறிச் செல்வதால் நிலவு சிவப்பு நிறமாகத் தெரிகிறது. வழக்கமான ரத்த நிலாவைப் போலன்றி, இந்த முறை நிலவின் விளிம்பில் ஒரு நீல நிறக் கோடு தென்பட வாய்ப்புள்ளது.
சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் படலத்தின் வழியாகச் செல்லும்போது, சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறங்கள் உறிஞ்சப்பட்டு, நீல நிற ஒளி மட்டும் நிலவின் விளிம்பில் பிரதிபலிக்கிறது. இதுவே இந்த 'ப்ளூ ரிம்' விளைவை ஏற்படுத்துகிறது.
இந்திய நேரப்படி கிரகணத்தின் தொடக்கம்: பிற்பகல் 3:20 மணி. முழு கிரகண நிலை மாலை 4:34 மணி முதல் 5:32 மணி வரையும், கிரகணம் முடிவு: இரவு 7:53 மணிக்கும் நடைபெறும்.
சென்னையில் நிலவு மாலை 6:17 மணிக்கு உதிக்கும். எனவே, நாம் கிரகணத்தின் இறுதிப் பகுதியை (சுமார் 30 நிமிடங்கள்) மட்டுமே காண முடியும். மாலை 6:17 முதல் 6:47 மணி வரை நிலவு ஒரு பகுதி மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கும். இரவு 7:53 மணிக்கு நிலவு முழுமையாகப் பூமியின் நிழலிலிருந்து வெளியே வரும்.
சூரிய கிரகணத்தைப் போலன்றி, சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பது முற்றிலும் பாதுகாப்பானது. இதற்கெனச் சிறப்புப் பாதுகாப்புக் கண்ணாடிகள் தேவையில்லை. நிலவின் தரைப்பகுதிகள் மற்றும் நீல நிற விளிம்பைத் தெளிவாகக் காணத் தொலைநோக்கி (Telescope) அல்லது பைனாகுலர்களைப் பயன்படுத்தலாம். கிழக்குத் திசை அடிவானம் தெளிவாகத் தெரியும் இடத்தைத் தேர்வு செய்து கொள்வது சிறந்தது. இந்தக் கிரகணம் முடிந்து அடுத்த முழுச் சந்திர கிரகணத்தைக் காண நாம் 2028, ஜூலை 6 வரை காத்திருக்க வேண்டும்.