குளச்சல் கடற்கரையில் விபரீத சாகசம்... கடல் அலையில் இழுத்துச்செல்லப்பட்ட சொகுசு ஜீப்.. நூலிழையில் உயிர்தப்பிய இளைஞர்கள்!
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே கடற்கரைப் பகுதியில் சொகுசு ஜீப் ஒன்றை ஓட்டி இளைஞர்கள் சிலர் ஆபத்தான முறையில் சாகசத்தில் ஈடுபட்ட போது, அந்த ஜீப் கடல் அலையில் சிக்கி இழுத்துச்செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குளச்சல் கடல் பகுதிக்குச் சுற்றுலா வந்த இளைஞர்கள் சிலர், தங்களது ஜீப் ஈரமான கடற்கரை மணல் பரப்பில் அதிவேகமாக ஓட்டிச் சாகசம் செய்ய முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாகப் பயங்கர வேகத்துடன் வந்த ராட்சத அலைகள், கடற்கரையில் நின்ற ஜீப்பை அப்படியே கடலுக்குள் இழுத்துச் சென்றன. அலைகளின் சீற்றத்தால் ஜீப் தண்ணீரில் மூழ்கத் தொடங்கியது.
ஜீப் கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்ட அந்தத் திக் திக் நிமிடங்களில், உள்ளே இருந்த இளைஞர்கள் அனைவரும் சற்றும் தாமதிக்காமல் சாதுரியமாகச் செயல்பட்டு, அவசர அவசரமாக வாகனத்தின் கதவுகளைத் திறந்து கொண்டு வெளியே குதித்தனர். நல்வாய்ப்பாக அவர்கள் அனைவரும் எவ்வித காயமுமின்றி மயிரிழையில் உயிர் தப்பினர்.
கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட சொகுசு வாகனத்தை மீட்பதற்காக அக்கம் பக்கத்தினர் மற்றும் உள்ளூர் மீனவர்களுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாலுமிகள் மற்றும் மீனவர்கள், கடலுக்குள் நின்ற ஜீப்பை வலுவான கயிறுகளால் கட்டினர்.
அதனைத் தொடர்ந்து, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு டிராக்டர் மற்றும் மனித ஆற்றல் உதவியுடன் அந்தச் சொகுசு ஜீப் பாதுகாப்பாகக் கரைக்கு இழுத்து வரப்பட்டு மீட்கப்பட்டது. கடற்கரைப் பகுதிகளில் இது போன்ற ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் எனப் போலீசார் மற்றும் கடலோரக் காவல் படையினர் எச்சரித்துள்ளனர்.