சொகுசு வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 7 பேர் பலி - இமாச்சல பிரதேசத்தில் சோகம்!

 

இமாச்சல பிரதேச மாநிலத்தின் சம்பா மாவட்டத்தில் இன்று அதிகாலை நேரிட்ட பயங்கர சாலை விபத்தில், சொகுசு வாகனம் ஒன்று மலைப்பாதையிலிருந்து ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்ததில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சம்பா மாவட்டத்திற்கு உட்பட்ட சத்ரண்ட் அருகே உள்ள மஸ்ரூண்ட் - ஹாமல் சாலையில் சொகுசு வாகனம் ஒன்று இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. மலைப்பாதையின் வளைவு ஒன்றில் திரும்ப முயன்ற போது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம், சாலையோரம் இருந்த ஆழமான பள்ளத்தாக்கிற்குள் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது.

விபத்து நடந்த சத்தம் கேட்டுப் பகுதி மக்கள் உடனடியாகப் போலீசாருக்கும், மீட்புக் குழுவினருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து பள்ளத்தில் கவிழ்ந்த வாகனத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்தவிபத்தில் வாகனத்தில் பயணித்த 7 பேர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலியானவர்கள் அனைவரும் சுற்றுலாப் பயணிகளா அல்லது உள்ளூர்வாசிகளா என்பது குறித்து இன்னும் முழுமையான விவரங்கள் தெரியவரவில்லை. உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றிய போலீசார், அவர்களை அடையாளம் காணும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மலைப்பாதையில் நிலவிய பனிமூட்டம் அல்லது ஓட்டுநரின் தூக்கக் கலக்கம் காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என முதற்கட்டமாகக் கருதப்படும் நிலையில், விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்துச் சம்பா மாவட்ட போலீசார் வழக்குப் பதிவு செய்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.