மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்! தேதி வெளியீடு!
தமிழ்நாட்டில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன.இந்த நிலையில், இரு தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வரும், அக்கட்சியின் தலைவருமான விஜய் 4 நாட்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் தலா 2 நாட்கள் என மொத்தம் 4 நாட்கள் அவர் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
தாராபுரம் தொகுதியில் செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் விஜய் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுராந்தகத்துக்கான பிரசார தேதிகள் குறித்த இறுதி அறிவிப்பு தனியாக வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இரு தொகுதிகளிலும் விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தாராபுரத்தில் உடுமலை சாலையில் உள்ள திருமலைபாளையம் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.தாராபுரத்தில் தவெக சார்பில் சத்தியபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா ஆகியோர் களத்தில் உள்ளனர்.இந்நிலையில், இரு தொகுதிகளிலும் நடைபெற உள்ள தலைவர்களின் பிரசாரத்தை முன்னிட்டு தேர்தல் பணிகள் மேலும் தீவிரமடைந்துள்ளன.